எவரெஸ்ட் உச்சியில் கால் வைத்த போது கோயிலுக்குள் இருப்பது போல் உணர்ந்தேன்!

நன்றி குங்குமம் தோழி

சென்னையின் புகழ்பெற்ற மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர். புகழ்பெற்ற மகப்பேறு நிபுணர் டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களின் மகள் மற்றும் பழங்கால நடிகர் ஜெமினிகணேசன் அவர்களின் பேத்தி, ஜி.ஜி மருத்துவமனையின் இயக்குநர்… இப்படி அவரைப் பற்றி அறிமுகம் கொடுத்துக் கொண்டே போகலாம். இப்போது தன் 52 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து தனக்கான மற்றொரு புது அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளார் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் ப்ரியா செல்வராஜ்.

‘‘2021ல் என்னுடைய சிகரம் பயணம் ஆரம்பித்தது. கொரோனா காலக்கட்டத்தில் பல இன்னல்களை சந்தித்தேன். முக்கியமா என் அப்பாவை இழந்தேன். மருத்துவராகவும் பல சவால்களையும் சந்திக்க வேண்டி இருந்தது. கோவிட்டால் அனைத்தும் முடங்கிப் போனது. இரண்டாம் அலைக்கு பிறகு கொஞ்சம் ெகாஞ்சமாக நிலமை சீரானது. அந்த சமயத்தில் தான் எனக்கு இயற்கையுடன் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

எனக்கு இந்தியாவை விட்டுப் போக விருப்பமில்ைல. என்னுடைய தேடலுக்கு ‘இந்தியா ஹைட்ஸ்’ நிறுவனம் விடை கொடுத்தார்கள். அவர்கள் சிகரம் ஏற்றம் சார்ந்த பயணம் செய்வதில் மிகவும் திறமையானவர்கள். அவர்களுடன்தான் என் முதல் டிரெக்கிங் பயணம் ஆரம்பித்தது. அதுதான் இன்று இமயம் வரை அழைத்து சென்றிருக்கிறது’’ என்றவர், தன் உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துள்ளார்.

‘‘நான் கொஞ்சம் பிட்னெஸ் ப்ரிக்னு சொல்லலாம். ேகாவிட் போது யோகா வீடியோ எல்லாம் வெளியிட்டிருக்கிறேன். அதனால் சிகர ஏற்றத்திற்கு பிட்னெஸ் எனக்கு பிரச்னையாக இல்லை. அதே சமயம் சிகர ஏற்றம், டென்ட் வாழ்க்கை, நம்முடைய தேவைகளை பார்த்துக் கொள்வது, சீதோஷ்ணநிலை மாற்றங்கள் எல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. அந்த அனுபவம் ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் ஒரு சிகரம் ஏற முடிவு செய்தேன்’’ என்றவர், தன்னுடைய 50வது வயதில் 13 ஆயிரம் அடி உயர சிகரத்தை அடைந்துள்ளார்.

‘‘ஒரு சிகரம் ஏறினால் அடுத்து அதைவிட உயர்ந்த சிகரத்தை தொடவேண்டும். அதனால் 19 ஆயிரம் அடி உயர சிகரமான கிளிமஞ்சாரோ போக முடிவு செய்தேன். ஆனால், அது வெளிநாட்டில் இருப்பதால், ‘எலீட் எக்ஸ்பெட்’ என்ற நிறுவனத்தில் இணைந்து அந்த சிகரத்தை அடைந்தேன். அந்த சிகரத்தை அடைந்த பிறகு என்னுடைய ஆர்வம் அதிகமானது. ஒவ்வொரு சிகரம் ஏறும் போதும் கிடைக்கும் அனுபவம், இயற்கை சொல்லிக் கொடுத்த பாடம் தான் என்னை எவரெஸ்ட் பேஸ்கேம்பிற்கு அழைத்து சென்றது. ஒருமுறை பேஸ்கேம்ப் அடைந்தால், அதன் பிறகு ஒரு வாரம் பயிற்சியில் நேபாளத்தில் உள்ள சிகரங்களை ஏறுவதற்கான சான்றிதழ் கிடைக்கும்.

அதைக் கொண்டு ஒவ்வொரு சிகர உச்சத்தை அடையலாம்னு சொன்னாங்க. நானும் பேஸ்கேம்ப் முடிச்சிட்டு, நேபாளத்தின் முக்கிய சிகரமான லோபோசீ கிழக்கினை அடைந்தேன். சான்றிதழும் பெற்றேன். அந்த சான்றிதழில் 7000 மற்றும் 8000 மீட்டர் உயர சிகரங்களை நான் ஏறலாம் என்று குறிப்பிட்டிருந்தது. சான்றிதழ் கையில் கிடைத்தும், 2025ல் செப்டம்பர் மாதம் மனசலு சிகரம் ஏறினேன். அதைத் தொடர்ந்து ஏழு மாதத்தில் எவரெஸ்ட் பயணம்.

எவரெஸ்ட் ஏறுவது ஒரு சாகசம்தான். அதே சமயம் என்னுடைய பேஷன்டுகளை விட்டுவிட்டு பயிற்சிக்காக சிகரங்கள் ஏற முடியாது. பயிற்சியும் எடுக்கணும் என்பதால் என் மருத்துவமனை படிக்கட்டுகளை பயிற்சி சிகரமாக மாற்றினேன். என்னுடைய பேக்பேக்கில் வெயிட்டை ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் உள்ள ராம்ப் மற்றும் படிக்கட்டுக்களை ஏறி பயிற்சி எடுத்தேன். பொதுவா 8000 மீட்டர் உயரம் ஏறணும்னா ஆக்லமடைசேஷன் முக்கியம்.

ஒவ்வொரு சிகரம் ஏறும் போதும் நம்முடைய இதய துடிப்பு, தசைகள், மூட்டுகள் எல்லாம் சரியா வேலை செய்யணும். காரணம், உயரம் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் அளவு குறையும். அந்தச் சூழலுக்கு நம் உடலை பழக்கப்படுத்த வேண்டும். அதனால்தான் எவரெட்ஸ் ஏறும் முன் அதன் பேஸ்கேம்ப்பினை முதலில் அடைவோம். அப்போதே நம்முடைய உடல் ஆரோக்கியம் குறித்து தெரிந்துவிடும்.

பேஸ்கேம்ப் நான் ஏற்கனவே முடித்து இருந்ததால் அங்கிருந்து எவரெஸ்ட் செல்ல நான்கு கேம்ப்களுக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு கேம்பிலும் இரண்டு இரவு தங்க வேண்டும். பிறகு மறுபடியும் கீழே இறங்கி நான்கைந்து நாட்கள் ஓய்விற்கு பிறகு எவரெஸ்ட் சிகரம் ஏறலாம். சிகரம் ஏறும் போது இருமல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சிகரத்தில் காற்று வறண்டு இருப்பதால், அது நம் சுவாசக் குழாயை பாதிக்கும். இதை சரியாக கவனிக்கவில்லை என்றால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும். பொதுவா சிகரம் ஏறும் போது உயரத்தினால் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால், சிலருக்கு நுரையீரல் அல்லது மூளையில் நீர் கோர்க்க வாய்ப்புள்ளது.

அவர்கள் உடனடியாக கீழே இறங்கிட வேண்டும். அதனால் சிகரம் ஏறும் போது வழிகாட்டி சொல்லும் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வாயை முழுமையா மூடிக்கொள்ளணும், உடலை ஹைட்ரேஷனாக வைத்துக் கொள்ளணும். நன்றாக சாப்பிடணும். காரணம், மேல ஏற ஏற நம்முடைய பசியின் தன்மை மாறும். உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியத்தின் மேல் கவனமா இருக்கணும்’’ என்றவர், 7000 மீட்டர் உயர சிகரத்தின் உச்சத்தினை அடைந்து இருந்தால் மட்டுமே ஒருவரால் எவரெஸ்ட்டினை ஏற முடியும்.

‘‘சிகரம் ஏறுவதற்கு தனிப்பட்ட நுணுக்கங்கள் உள்ளது. நம்மை யாரும் தூக்கிக் கொண்டு போய் சிகர உச்சியில் உட்கார வைக்க மாட்டாங்க. நாமதான் ஏறணும். காலில் பூட்ஸ், கயிறு பிடித்து ஏறுவது என அனைத்தும் நாமதான் செய்யணும். அதற்கான அனுபவம் வேண்டும். எவரெஸ்டில் மிகவும் ஆபத்தானது கும்பு பகுதி. அதை தாண்டினால்தான் முதல் கேம்ப் வரும். நான் எவரெஸ்ட் ஏறி இருந்தாலும், ஆரம்பத்தில் சாதாரண சிறிய சிகரம் ஏறுவது அவ்வளவு சுலபமாக இல்லை. பயிற்சியே எடுத்திருந்தாலும், சிகரம் ஏறும் போது ஏற்படும் அனுபவங்கள் வேறு. நான் முதலில் ேமற்குவங்காளத்தில் உள்ள 3600 மீட்டர் உயரமான சண்டக்பூவிற்குதான் சென்றேன்.

அது ஒரு ரம்மியமான அனுபவம். ஒருநாள் இரவு நேபாளத்தில், மறுநாள் இந்தியாவில் என மாறி மாறி இருந்தோம். சிகரம் ஏறும் போது ஒரு பகுதி புல்வெளியாக இருக்கும். சீதோஷ்ணநிலையும் குளிர், வெயில் என மாறி மாறி வரும். சிகர உச்சிக்கான பாதை கரடு முரடாக இருக்கும். எவ்வளவு கடினமாக இருந்தாலும் நம்முடன் வரும் வழிகாட்டி திறமைசாலியாக இருந்தால் எந்த சிகரத்தையும் அடைய முடியும். எங்களுடன் வந்தவர் சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து அழைத்து சென்றார்’’ என்றவர், எவரெஸ்ட் பயண அனுபவத்தை பகிர்ந்தார்.

‘பேஸ்கேம்ப், ரொட்டேஷன் எல்லாம் முடிச்சிட்டு கும்பு சிகரத்தை இரவு கடந்து முதல் கேம்பிற்கு காலையில் போய் சேருவோம். அங்க ஒருநாள் இரவு தங்குவோம். அதன் பிறகு கேம்ப் 2,3ல் தங்க வேண்டும். கடைசியா கேம்ப் 4ஐ அடைந்து, அன்றிரவு எவரெஸ்ட் சிகரம் நோக்கி பயணிக்க வேண்டும். எவரெஸ்ட் உச்சியை அடைய 13 மணி நேரம் கூட ஆகலாம். காரணம், அங்கிருக்கும் சவாலே அதன் சீதோஷ்ணநிலை. எப்போது வேண்டும் என்றாலும் மாறும். பொதுவா எவரெஸ்ட் சிகரத்தை இரவு நேரம்தான் ஏறுவோம். காரணம், பகல் இரண்டு மணிக்கு அதன் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்படும். அதில் சிக்கிக் கொண்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனாலதான் இரவு நேரத்தினை தேர்வு செய்வார்கள்.

இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இரவில் இருள் படர்ந்து இருப்பதால், சிகரத்தின் பிரமாண்டம் நமக்கு புலப்படாது. அதுவே பகல் நேரத்தில் ஏறும் போது பனிப் படர்ந்த பிரமாண்டத்தை பார்க்கும் போது மலைப்பாக தோன்றும். ஆனால், அதன் உச்சியை அடைவது கொஞ்சம் கடினமான டாஸ்க்தான். ஒரு குறுகிய மலைமுகட்டை தாண்டினால்தான்
உச்சத்தை அடைய முடியும். அந்தப் பகுதியை கடக்கும் போது கண்டிப்பாக ஒன்றிரண்டு சடலங்களை பார்க்காமல் செல்ல மாட்டோம். இதை எல்லாம் கடந்து காலை சூரிய உதயத்தை உச்சியில் பார்க்கும் போது அதைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இருக்காது. அவ்வளவு அழகா இருக்கும்.

ஒரு 15 நிமிடம் சிகரத்தின் அழகை நான் ரசித்தேன். அந்த சமயம் நான் பெரிய சாதனை படைச்சிட்டேன்னு எல்லாம் தோணல. என்னை மிகவும் பாதுகாப்பா உச்சிக்கு ஏற வழிவகுத்த இயற்கை அன்னைக்கு தலை வணங்கி நன்றியை செலுத்தினேன். மேலும், என் மருத்துவமனை சார்பாக ஆரம்பிக்க இருக்கும் அமைப்பின் கொடியினை சிகரத்தின் உச்சியில் வைத்து ஆசீர்வாதத்தை பெற்றேன். இந்த பிரமாண்டத்திற்கு முன் நான் ஒரு சிறு புள்ளி என்று தோன்றியது. கிட்டத்தட்ட ஒரு கோயிலுக்குள் சென்ற உணர்வு ஏற்பட்டது.

சிகரம் ஏறுவதை விட அதிலிருந்து இறங்குவதை வேகமாக செயல்படுத்த வேண்டும். அதாவது, பேஸ்கேம்ப் 2 வரை இறங்கிட வேண்டும். ஆனால், நாங்க மிகவும் சோர்வாக இருந்ததால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து கேம்ப் 4ல் சிலமணி நேரம் இளைப்பாறிவிட்டு அன்று இரவுதான் கீழே இறங்கினோம். எவரெஸ்ட் பொறுத்தவரை அங்கு ஒருவர் மரணித்தால், அவரின் சடலத்தை கீழே கொண்டு வருவது இயலாதது. அதனாலேயே அங்கேயே விட்டுவிடுவார்கள். சிலர் நேபாளத்தில் ஈமச்சடங்கு முடித்துவிட்டு அஸ்தியை மட்டும் கொடுக்க சொல்லி கேட்பார்கள்’’ என்று சொன்ன டாக்டர் ப்ரியா செல்வராஜ், தன்னுடைய அடுத்த பயணம் சர்ப்பிரைஸா இருக்கும் என்று தெரிவித்தார்.

தொகுப்பு: ஷம்ரிதி

 

Related Stories: