நன்றி குங்குமம் தோழி
தனிமையில் இந்தியர்கள்
உலகளவில் தனிமையில் தவிப்பவர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. காரணம், இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப்
பிடித்திருக்கிறது, இந்தியா. குடும்பம் என்பது அடையாளமாகவும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாடாகவும் திகழும் இந்தியாவில் தனிமை உணர்வு அதிகரித்திருப்பதுதான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம். இத்தனைக்கும் இந்தியாவில் வலிமையான குடும்பக் கட்டமைப்பு உள்ளது. இந்தியாவில் வெறும் 3.7 சதவீத வீடுகளில் மட்டுமே ஒரு நபர் வாழ்கிறார். ஆம். உலகளவில் ஒரேயொரு நபர் வாழும் வீடுகள் குறைவாக உள்ள நாடும் இந்தியாதான்.
மாத வருமானம் ரூ.22 லட்சம்!
உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரத்தின் நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் பண்ணையில் அமைந்திருக்கும் ஒரு நீச்சல் குளத்தை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். அந்த நீச்சல் குளத்தின் முதலாளி மாதம் 22 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்பதுதான் அந்த ஹாட் டாக்கிற்கு மூல காரணம். நீச்சல் குளத்துக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் அரை மணி நேரத்துக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடைக்காலங்களில் தினமும் 750 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். அதனால் தினமும் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. கோடைக்காலம் முடிந்த பிறகும் பிசினஸ் நன்றாகப் போகிறது. ஆம்; மற்ற மாதங்களில் தினமும் குறைந்தபட்சம் 250 பேர் வருகின்றனர். இதன் மூலம் தினமும் 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை
சமீபத்தில் உலகின் தலைசிறந்த ஜூனியர் டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு. இதில் பெங்களூருவைச் சேர்ந்த சிருஷ்டி கிரண் என்ற வீராங்கனை 357வது இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறார். அதே நேரத்தில் 13 வயதுக்குட்பட்டவர்களில் கிரண்தான் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக விளையாடிய 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மட்டுமல்ல, சர்வதேச அளவிலான ஐந்து டென்னிஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் அவருக்கு 14 வயதாகப் போகிறது.
பேனாவில் எழுதுவதுதான் நல்லது!
சில மாதங்களுக்கு முன்பு நரம்பியல் விஞ்ஞானியான ஆட்ரி வான் டெர் மீர் என்பவர் கையால் எழுதுவது குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டார். ‘‘கையால் எழுதுவது மூளையின் நினைவாற்றல்
மற்றும் கற்றல் மையங்களை இணைக்கிறது. ஆனால், கீ போர்டில் டைப் செய்வது மூளையை ஆட்டோபைலட் முறையில் சோம்பேறியாக்குகிறது. லேப்டாப் பயனாளிகளை விட, கைகளால் குறிப்பெடுக்கும் மாணவர்களே பாடங்களை ஆழமாகப் புரிந்துகொள்கிறார்கள்.
மனதைக் கூர்மையாக்க, தற்காலிக டிஜிட்டல் வேகத்தை விடுத்து, பேனாவைக் கையில் எடுப்பதே சிறந்த தீர்வு’’ என்று ஆட்ரி தெரிவித்துள்ளார். கையால் எழுதுவது மூளையின் பல பகுதிகளை ஒரே நேரத்தில் தூண்டுகிறது. எழுதும் செயல்முறை தகவல்களை மூளையின் ஆழமான பகுதியில் சேமிக்க உதவுகிறது. குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கையால் எழுதிப் படிக்கும்போது பாடங்களை மிக விரைவாக புரிந்துகொள்கிறார்கள்.
இந்தியர்களின் எதிர்காலம்!
சமீபத்தில் மும்பையில் வசிக்கும் இல்லத்தரசி ஒருவரின் வீடியோ ஒன்று செம வைரலானது. அதில் அவர் தனது தலையில் கேமராவை மாட்டிக்கொண்டு, சமையலறையில் மாம்பழம் நறுக்குவது, காபி போடுவது, துணி மடிப்பது போன்ற அன்றாட வீட்டு வேலைகளை செய்வதை வீடியோவாக பதிவு செய்கிறார். இப்படி பதிவு செய்யும் ஒரு மணி நேர வீடியோவுக்காக அவருக்கு 250 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வீடியோக்களின் மூலம் மனிதர்கள் செய்யும் நுணுக்கமான உடல் அசைவுகள், கைகளை நகர்த்தும் விதம் ஆகியவற்றை ஏஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் நிறுவனங்கள் சேகரித்து, ஹியூமனாய்டு ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன.
இதன் மூலம் எதிர்காலத்தில் மனிதர்கள் செய்யும் வீட்டு வேலைகள் மற்றும் சாதாரணப் பணிகளை கூட மனிதர்களை போன்ற ஹியூமனாய்டு ரோபோக்களால் மிகத் துல்லியமாகச் செய்ய முடியும். அதனால் அந்த இல்லத்தரசியின் வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள், ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் என்று இந்தியர்கள் தங்களின் எதிர்காலத்தை அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர் என்று விமர்சித்திருக்கின்றனர்.
தொகுப்பு: த.சக்திவேல்
