நன்றி குங்குமம் தோழி
(இது மனிதர்களின் அடையாளத் தேடல் மற்றும் மீண்டெழுதலின் பயணம்!)
தன்னைக் காதலித்து துரோகம் செய்த ஒருவனுக்காக சாகும் முடிவைத் தேடுகிறார் திருநங்கை ஒருவர். அப்போது அவரின் மனசாட்சி கேள்விகளால் அவரைத் துளைத்தெடுக்கிறது. இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதை, அவரது பிளாஷ்பேக் காட்சியாக நம் கண் முன்னே விரிகிறது…எந்த ஒரு மனிதனுக்கும் உலகத்தில் மிகவும் பாதுகாப்பான இடம் அவன் உடம்புதான். அந்த உடம்பில் நடக்கின்ற மாற்றங்களை உள்வாங்க முடியாத நிர்பந்தம் நேரும்போது அங்கே மிகப்பெரிய விரக்தி ஏற்படுகிறது. இதுவொரு மிகப்பெரிய முரண்பாடு.
இப்படியாக மாற்றுப் பாலின சமூகமான திருநங்கைகள் கடக்கின்ற வலி மிகுந்த இன்னல்களையும், சமுதாயத்தால் அவர்களுக்கு நடக்கும் பிரச்னைகளையும், சென்னை ஆழ்வார்பேட்டை ‘மேடை’நாடக அரங்கில் ‘உச்சம்’ என்ற தலைப்பில், ஒன்றேகால் மணி நேர நாடகத்தை மேடையேற்றி நடித்துக் காட்டி, பார்வையாளர்களின் கண்களுக்கு தங்கள் நடிப்பால் விருந்தளித்தனர், திருநங்கை பிரீத்திஷா மற்றும் அவரது குழுவினர்.
எட்டு வயதுவரை வீட்டில் செல்லமாக சந்தோஷமாக வளர்க்கப்பட்ட ஒரு பையன், 13 வயது நெருங்கும்போது, அவன் உணர்வுகள், உடல் பாவனைகள் என அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பெண் தன்மை நோக்கி மாற, வீட்டில் இருப்பவர்களுக்கோ அவன் மீது கடுமையாய் கோபம் வருகிறது.சிறுவனை மிகக் கொடூரமாக அடித்தும், தாக்கியும் கண்டிப்பதோடு, சிறுவன் மீது சந்தேகமும் அடைகிறார்கள். ஆனால், சிறுவனுக்கோ தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் எனச் சொல்லத் தெரியவில்லை. தன் உடம்பில் நடக்கும் இந்த மாற்றத்தை, ஏன் தன்னால் சகஜமாய் சொல்ல முடியவில்லை? இந்தக் குழப்பமே சிறுவனை, அவன் வீட்டை விட்டே வெளியேற்றும் அளவுக்குச் செல்கிறது.
இன்று வளர்ந்து, முழுவதும் பெண்ணாக மாறி நிற்கும் 38 வயது திருநங்கை பிரீத்திஷாவுக்கு தான் யார்? தனது அடையாளம் என்ன? தனக்கு என்ன உரிமைகள் இருக்கு எனத் தெளிவாகத் தெரியும். ஆனால், 13 வயது சிறுவனாய், அந்தக் குழந்தைக்கு திருநங்கை என்கிற வார்த்தைகூடத் தெரியாது. தன் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் தாறுமாறாக மாறுவதற்கான அறிவியலும் அப்போது புரியாது. தன் உடம்பே தனக்கு எதிரியாக மாறுகிற உணர்வு அது.
தனக்கு ஏன் இப்படி நிகழுது என்று புரியாதபோது, குடும்பம் கொடுக்கின்ற அதீத அழுத்தம், குற்றவாளி மனநிலைக்கு அந்த சிறுவனைத் தள்ளுகிறது. இதைவிட மிகப்பெரிய உளவியல் ரீதியான போராட்டம் ஒரு குழந்தைக்கு இருக்கவே முடியாதுதான். வீட்டில் கிடைக்கும் அடிகளுக்கும், திட்டுகளுக்கும் பயந்த சிறுவன், வீட்டைவிட்டு வெளியேறி, உடையில் ஆணாகவும், ஆனால், பெண்மை தன்மை கலந்த பாவனைகளுடன் வலம் வருகிறான். அப்போது தவறானவர்களிடம் சிக்கி பல்வேறு பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகிறான்.இதுவே சிறுமியாக இருந்தால், “என்னை கிண்டல் செய்யுறாங்க. தவறாகத் தொட்டார்கள்” என பெற்றோரிடமோ அல்லது காவல் நிலையத்திலோ புகார் சொல்ல முடியும். ஏனெனில் சிறுமிக்கு இந்த சமூகத்தில் பெண் என்ற அங்கீகாரம் இருக்கிறது. குட் டச், பேட் டச் குறித்தும் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், 13 வயது திருநங்கை சிறுவனுக்கு அப்யூஸ் என்றால் என்னவென்றே தெரியாது. பையன் உடம்பில் இருக்கின்ற தன்னிடம், ஏன் தவறாகவே இந்த சமூகம் நடந்து கொள்கிறது? தன்னை ஏன் எல்லோரும் ஒரு மாதிரி கேலியாக, கேவலமாக பார்க்கிறார்கள் என்பது அப்போது புரியாது. பல கேள்விகளுக்கு அந்தக் குழந்தைக்கு பதில் தெரியாதுதான்.காவல் நிலையத்தில் பாதுகாப்புத் தேடினாலும், காவலர்கள் பாதிக்கப்பட்டவனை சிறுவனாய் பார்க்காமல், விசித்திரமான பொருளாய் பார்ப்பார்கள். வார்த்தைகள் அற்ற அந்த வலிதான் சமூகத்தின் மிகக் கொடூரமான பக்கம். பல்வேறு கொடூரங்களை அனுபவித்து, தெருக்களில் அடிகள் பல வாங்கி, தங்குவதற்கு இடமின்றி, பசியால் குப்பைத் தொட்டியில் இருக்கும் உணவை சேகரித்து சாப்பிடும் நிலைமைக்கு தள்ளப்படுகிற கொடுமையான சூழ்நிலை அது.
வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், சமூகத்தின் ஆதரவின்றி, நெருக்கடிகளுக்கு ஆளாகும்போது, அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றுகிற, தன்னைப் போன்ற மாற்றுப்பாலின சமூகத்தை சந்திக்கிறான். மிகப்பெரிய அரவணைப்பு அவனுக்கு கிடைக்கின்றது. அதுவரை தன்னை ஒரு அப்நார்மல் நபரென நினைத்தவனுக்கு, திருநங்கைகள் சமூகத்தை பார்த்ததும், தனக்கான ஒரு இனம் இருக்கு என்கிற ஆறுதலும் கிடைக்கின்றது.
நான் தனியாக இல்லை, என்னை மாதிரியே பலரும் இங்கு இருக்கிறார்கள் என்பதை சிறுவன் உணர்கிறான். தனக்கு வந்திருப்பது வியாதியல்ல… இயல்பான விஷயமெனவும் அவனுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கிறது. சாப்பாடும், தங்குகிற இடமும் கொடுக்கும் தைரியத்தைவிட, நான் தனியாக இல்லை என்ற உணர்வுதான், முதல் முறையாக வாழும் ஆசையினை அந்த சிறுவனுக்குள் ஏற்படுத்துகிறது.
திருநங்கைகள் சமூகத்தில் இணைந்து தன்னை ஒரு முழுமையான பெண்ணாக வடிவமைத்துக் கொண்டவனுக்கு, பின்னாளில், காதல் தோல்வி கொடுத்த வலியும் பெரிதுதான். ஆனால், ஒரு திருநங்கையாக, வாழ்வின் தொடக்கத்தில்… ரோட்டில் அனாதையாக அடி வாங்கியது… தான் சந்தித்த சமூக நிராகரிப்புகள்… பசி மிகுதியில் குப்பைத் தொட்டிகளில் பொறுக்கி உணவு சாப்பிட்டது போன்ற பெரும் வலிகளோடு ஒப்பிட்டால், காதலால் கிடைத்த துரோகம் சின்னதாகப்படுகிறது.
பிரச்னை என்பது ஒரு கல் போன்றது. கண்ணுக்கு மிக அருகில் வைத்தால் அது ஒரு மலையாகத் தெரியும், தூரத்தில் வைத்துப் பார்த்தால் அது சிறு கல்லாகத்
தெரியும். ஆம்! காதலனோட துரோகத்தை பக்கத்தில் வைத்துப் பார்த்தபோது மலையாக தெரிந்த ஒன்று… அதே துரோகத்தை தன் மொத்த வாழ்க்கை போராட்டத்தோடு சேர்த்து தூரமாக வைத்துப் பார்க்கும்போது, சிறு கல்லாய் தெரிகிறது என்பதே மொத்த நாடகத்தின் கருத்தாய் வெளிப்படுகிறது.
நாடகத்தில் சிறுவனாக… திருநங்கையாக… பின்னாளில் நடிகையாக… காதலனால் ஏமாற்றப்பட்ட திருநங்கை பாத்திரமாக என பல்வேறு பாத்திரங்களை அசால்டாக ஏற்று நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் திருநங்கை பிரீத்திஷா. அவரோடு அவரின் குழுவினரும் இணைந்து மிகச் சிறப்பாக தங்களின் நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி இருந்தனர்.
நான் திருநங்கை பிரீத்திஷா…
‘‘திருநெல்வேலி மாவட்டம், கல்யாணிபுரம் என்ற ஒரு சின்ன கிராமத்தில் 13 வயது சிறுவனாய், எட்டாம் வகுப்போடு என் பள்ளிப் படிப்பு நின்று போனது.2004ல் என் வீட்டை விட்டு வெளியில் வருகிறேன். 14 வயதில் பூனேயில் எனக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.பிறகு ஐந்து ஆண்டுகள், திருநங்கைகள் சமூகத்தில் இணைந்து வீதி வீதியாக… கடை கடையாக ஏறி பதாய் நடனம் ஆடி சம்பாதிக்கத் தொடங்கினேன். பதாய் நடனம் என்பது அங்கு ரொம்பவே பிரபலம்.
2012ல் சென்னை திரும்பி, தியேட்டர் லேப் ஆக்டிங் இன்ஸ்டிடியூட்டில் இணைந்து நடிப்பு பயிற்சியை எடுக்கத் தொடங்கி, அப்படியே வருமானத்திற்காக உபர் ஈட்ஸில் உணவு டெலிவரி வேலையும் செய்யத் தொடங்கினேன். உபர் ஈட்ஸின் முதல் திருநங்கை டெலிவரி பார்ட்னர் என்ற பெருமையும் எனக்குண்டு.பகல் முழுக்க பைக்கில் உணவு டெலிவரி. ராத்திரியில் உட்கார்ந்து படித்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை டுட்டோரியல் மூலம் எழுதி தேர்வானேன்.
பிறகு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பேச்சுலர் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் எடுத்து படித்து முடித்தேன். என்னோட 35வது வயதில் சென்ட்ரல் யூனிவர்சிட்டி நுழைவுத் தேர்வினை ஆங்கில வழியில் எழுதித் தேர்வாகி,புதுச்சேரி சென்ட்ரல் யூனிவர்சிட்டியில் MPA(Master of Performing Arts) ரெகுலர் படிப்பில் காலடி எடுத்து வைத்தேன்.
20 வருடங்களுக்கு முன், எந்தக் கல்வி அமைப்பு என் உடலுக்குள் ஏற்பட்ட மாற்றத்தால், என்னை வெளியே துரத்தியதோ, அதே கல்வி அமைப்புக்குள் 20 வருடம் கழித்து, தேசிய அளவில் தேர்ச்சிப் பெற்று, கெத்தாக உள்ளே நுழைந்தேன். இது என் தனிப்பட்ட வெற்றி மட்டுமில்லை. ஒட்டுமொத்த சிஸ்டத்துக்கே நான் கொடுத்த பதிலடி. பிறகு என் பேராசிரியரின் வழிகாட்டுதலில், தேசிய நாடகப் பள்ளிக்கு இணையாக கர்நாடகாவில் இயங்கி வரும், ‘நீனாசம்’(NINASAM) நாடகப் பள்ளியிலும் இணைந்து நடிப்பில் என்னை கூர்மைப்படுத்தி பட்டை தீட்டிக் கொண்டேன்.’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
