*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ரயில்வே ஜங்ஷனின் முகப்பில் இருந்த உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுர உருவத்தை இடித்துஅகற்றிவிட்டு, தற்போது வடமாநில மந்திர் கோயிலை கட்டி அதற்கு காவி நிற வர்ணம் பூசியுள்ள ஒன்றிய அரசின் ரயில்வே நிர்வாகத்திற்கு தஞ்சாவூர் மக்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இந்தி திணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டி உள்ளனர்.
தஞ்சாவூர் ரயில்வே ஜங்ஷனின் முகப்பில் பெரிய கோயிலுக்குள் செல்வதை போன்ற உணர்வை ஏற்படுத்திடும் வகையில் உலகப் பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரம் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரூ.25 கோடி ரூபாய் நிதியில் ரயில்வே ஜங்ஷனை புதுப்பிக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தஞ்சாவூர் ரயில்வே ஜங்ஷன் முகப்பில் பெரிய கோயிலில் இருக்கும் 216 அடி விமான கோபுரம் போன்ற மாதிரி கோபுரம் கம்பீரமாக இருந்தது. இதனை பார்போர் அனைவரையும் கவர்ந்து வந்தது. தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதன் பேரில், முன்பு அழகாக காட்சியளித்த தஞ்சை பெரிய கோயிலின் மாதிரி வடிவமைப்பை அகற்றி உள்ளனர்.
புனரமைப்பு பணியின் போது புதிதாக தஞ்சை பெரிய கோயில் கோபுரம் வடிமைக்கப்படும் என்று தஞ்சை மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது வட மாநிலங்களில் உள்ள மந்திர் கோயிலை போன்ற வடிவமைப்பு கொண்ட கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்த கோபுரத்திடிற்கு காவி நிறத்தில் வர்ணம் பூசியுள்ளனர். இதனை காணும் தஞ்சை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறுகையில்:
ரயில்வே ஜங்ஷனின் முகப்பை பார்த்தால் நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோமா? அல்லது வட மாநிலத்தில் இருக்கிறோமா? என்கிற சந்தேகம் வருகிறது. இது போன்று வடமாநில மந்திர் கோயில் கட்ட வேண்டாம் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு கட்டாய கலாச்சார திணிப்பாக இவ்வாறு கோபுரம் வடிவமைக்கப்பட்டு அதற்கு காவி நிறம் வேறு பூசப்பட்டு உள்ளது.
மேலும் தஞ்சாவூர் ரயில்வே ஜங்ஷன் வளாகம் முழுவதிலும் இந்தி எழுத்தின் ஆதிக்கமாக இருக்கிறது. நாட்டில் 22 மொழிபேசும் மக்கள் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது. பல கட்ட போராட்டத்திற்கு பின்பு தஞ்சை பெரிய கோவில் கோபுர வடிவத்தை கடமைக்காக இரண்டாவது நுழைவாயிலில் ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது.
இதுவே தஞ்சை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் தமிழ் அமைப்பினரை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை ரயில்வே ஜங்ஷன் முகப்பில் வடமாநில மந்திர் கோயில் வடிவமைக்கப்பட்டு, காவி பூசப்பட்டுள்ள விவகாரம் தஞ்சை மக்களிடையே விரைவில் பூதாகரமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது.
