கும்பகோணம்: கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளை கையில் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநாகேஸ்வரம் நெல் அரவை ஆலையில் 18 லட்சம் கழிவு சாக்குகள் தேக்கம் அடைந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் சாக்கு பைகளோடு நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நவீன அரிசி ஆலையின் கிடங்குகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 18 லட்சம் கிழிந்த சாக்குகள் அப்புறப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு கிடங்குகளில் பல லட்சம் பழைய சாக்குகள் தேங்கியுள்ளதால், கொள்முதல் செய்யப்படும் புதிய நெல் மூட்டைகளை மழையிலும் வெயிலிலும் திறந்தவெளியில் வைக்க வேண்டிய அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருநாகேஸ்வரம் அரசு கிடங்குகளில் 18 லட்சம் கிழிந்த சாக்குகள் வீணாக இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தற்போதைய கொள்முதல் காலத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் புதிய நெல் மூட்டைகளைப் பாதுகாக்க இடமில்லாமல், அவை திறந்தவெளியில் வெயிலிலும் மழையிலும் நனைந்து வீணாகி வருகின்றன.
திறந்தவெளியில் வீணாகும் நெல் மூட்டைகளைக் கிடங்குகளில் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும் என்று கோரி, கையில் கிழிந்த சாக்குகளை ஏந்தியபடி கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக விவசாயச் சங்கத்தினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
