ஈரோடு,ஜூலை13: ஈரோடு முத்தம்பாளையம் ஹவுஸ்சிங் யூனிட் பகுதி 8ல் சாக்கடை கால்வாய் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஈரோடு அடுத்த முத்தம்பாளையம் பகுதி 8ல், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சாக்கடை கால்வாய் வசதி இதுவரை செய்து தரப்படவில்லை. இதனால், குடியிருப்புகளில் இருந்து அன்றாடம் வெளியேறும் கழிவுநீர்,ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால், கொசு உற்பத்தியாகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் ஆபத்தும் உள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். எனவே, கழிவுநீர் வெளியேறும் வகையில், அப்பகுதியில் விரைவில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
