செக் மோசடி வழக்கில் இந்தி நடிகருக்கு 3 மாதம் சிறை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: செக் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவிற்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் தனது முதல் படத்தை இயக்குவதற்காக ‘முரளி புராஜெக்ட்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்தத் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான பல காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பின.

இது தொடர்பாக தொடரப்பட்ட 7 வழக்குகளில், கடந்த 2018ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராஜ்பால் யாதவ் ஜாமீனில் இருந்து வந்த நிலையில், தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜ்பால் யாதவை சரணடைய உத்தரவிட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி 4ம் தேதி அவர் திகார் சிறையில் சரணடைந்தார்.

பின்னர் இந்த வழக்கில் மார்ச் 18ம் தேதி உயர் நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. ராஜ்பால் யாதவ், புகார்தாரரிடம் ரூ. 1.5 கோடியைச் செலுத்தியதைத் தொடர்ந்து, அவரது தண்டனையை நிறுத்திவைத்து, அவரை விடுவிக்க உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஸ்வரணா காந்தா ஷர்மா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ராஜ்பால் யாதவின் தண்டனையை உறுதி செய்து, உத்தரவிட்டார். எனினும், விசாரணை நீதிமன்றம் முன்னதாக வழங்கிய தண்டனையை அவர் திருத்தியமைத்தார். அதன்படி 7 காசோலை மோசடி வழக்குகளில் தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, அனைத்துத் தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: