போதைக்காக தவறாக பயன்படுத்துவதை தடுக்க 12% ஆல்கஹால் கலந்த மருந்துகளை நேரடியாக வாங்க தடை: உரிமம் பெறுவதும் கட்டாயம்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: போதைக்காக தவறாக பயன்படுத்துவதை தடுக்க 12% ஆல்கஹால் கலந்த மருந்துகளை நேரடியாக வாங்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் அத்தகைய மருந்துகளுக்கு உரிமம் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “இஞ்சி, ஏலக்காய் மற்றும் பிற நறுமண பொருள்கள் கலந்த டிங்க்சர்கள் உள்ளிட்ட சில மருத்துவ தயாரிப்புகளுக்கு, மருந்துகள் விதிகள் 1945ன்கீழ் உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவற்றில் சில கலவைகளில் அதிகளவில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை எத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதால், அவை போதைக்காக தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக சில மாநில அரசுகளிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு, 30 மில்லிக்கும் அதிகளவில், 12 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தில் ஆல்கஹால் கலந்த அனைத்து மருந்து கலவைகளும் இனி விலக்கு வரம்புக்குள் வராது. அத்தகைய தயாரிப்புகளுக்கு மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருள்கள் சட்டம், 1940ன்கீழ் உரிய உரிமங்கள் பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.

இந்த மருந்து கலவைகள் அனைத்தும் அட்டவணை எச்1ன்கீழ் மாற்றப்பட்டுள்ளன. எனவே இவற்றை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் பதிவு பெற்ற மருத்துவரின் பரிந்துரையும் கட்டாயமாகும். இதுபோன்ற மருந்துகளை வாங்குவோரின் விவரங்களை தனியாக பதிவேட்டில் பதிவு செய்வதும் கட்டாயமாகும்.

ஆல்கஹால் அடங்கி உள்ள மருத்துவ பொருள்கள் மீதான ஒழுங்குமுறை மேற்பார்வையை இந்த திருத்தம் வலுப்படுத்தும். ஒழுங்குபடுத்தப்பட்ட மருந்து விநியோக சங்கிலி மூலம் மட்டுமே அவை விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும்.  சட்டப்பூர்வமான சிகிச்சை பயன்பாடுகளுக்காக அவை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுடன், திசை திருப்புதல் மற்றும் தவறான பயன்பாட்டுக்கான சாத்தியக்கூறுகளையும் இந்த திருத்தம் கணிசமாக குறைக்கும்” என தெரிவித்தனர்.

Related Stories: