போலி பட்டம், சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த விவகாரம் பீகாரில் 3,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய மாநில அரசு முடிவு: வாங்கிய சம்பளத்தை திரும்ப வசூலிக்கவும் திட்டம்

பாட்னா: பீகாரில் கடந்த 2006 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆசிரியர் பணி நியமனங்கள் நடந்தன. இதில் பலர் போலி பட்டங்கள், கல்வி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பீகார் கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “2006 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமனங்களில் போலி கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட போலி சான்றிதழ்கள், பட்டங்களை பயன்படுத்தப்பட்டது. போலி ஆவணங்களை வைத்து முறைகேடாக பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆசிரியர்களின் பணிக்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை வட்டியுடன் மாநில கல்வித்துறை திரும்ப பெறும். இதுகுறித்த விசாரணையின்போது சில ஆசிரியர்கள் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்க முன்பே ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Related Stories: