சென்னை: இந்திய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான “கிரஹா ஸ்பேஸ்”, ஸ்கைரூட் நிறுவனத்தின் “விக்ரம்-1” ராக்கெட் மூலம் “சோலாராஸ்” என்ற சோதனை நானோ செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் செலுத்த உள்ளது. இதை ஏவுவதன் மூலம், இந்நிறுவனம் தனது நானோசெயற்கைக்கோளை பூமியின் தாழ் வட்டப்பாதையில் (low earth orbit) நிலைநிருத்தி நிரூபிக்கும் முக்கிய மைல்கல்லாக அமையும். ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட உள்ள தனது நானோசெயற்கைக்கோளின் மூலம், எதிர்கால திட்டங்களுக்குத் தேவையான பல்வேறு மின்னணுவியல் கூறுகள் மற்றும் சாதனங்களை உள்ளடக்கிய அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளை சோதனை செய்ய கிரஹா ஸ்பேஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும், ஆந்திர மாநிலத்தில் உள்ள விஐடி பல்கலைக்கழகம் உருவாக்கிய விஸ்வா –எம் (VISWA-M) என்ற கல்வி ஆராய்ச்சிக்கான சூரிய கதிர்வீச்சை கண்காணிக்கும் உபகரணத்தையும் இணைத்து விண்ணுக்கு அனுப்புகிறது. மேலும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான இணைக்கப்பட்ட பிற ஆராய்ச்சி கருவிகளை தாங்கி செல்லும் தொழில்நுட்ப திறன் கட்டமைப்பை நிரூபிக்க உள்ளது. குறைந்த செலவில், எளிய முறையில் விண்வெளித் தரவுகளைப் பெறுவதன் மூலம் விவசாயம், பேரிடர் மேலாண்மை, காலநிலை கண்காணிப்பு மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளுக்குப் புதிய வழிவகைகளை ஏற்படுத்துவதே தங்களின் நோக்கம் என்று கிரஹா ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோலாராஸ் (SOLARAS) மூலம் இந்தியாவில் இருந்து வேகமான, நெகிழ்வான மற்றும் பயன்பாடு சார்ந்த விண்வெளி செயற்கைக்கோள் திட்டங்களை செயல்படுத்துவதை முக்கிய மைல்கல்லாக கிரஹா ஸ்பேஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இது குறித்து கிரகா ஸ்பேஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் குமார் கூறுகையில், “இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை தற்போது புதிய கண்டுபிடிப்புகள், கூட்டு ஒத்துழைப்பு மற்றும் உலகத் தரமான திறன்களை உருவாக்கும் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. விக்ரம்-1 போன்ற உள்நாட்டு ராக்கெட் திட்டங்கள், வளர்ந்து வரும் விண்வெளி நிறுவனங்களுக்கு தங்கள் தொழில்நுட்பங்களை நிரூபிக்கவும், புதுமையை விரைவுபடுத்தவும் பெரும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. கிரஹா ஸ்பேஸ் நிறுவனத்திற்கு, சோலாராஸ் (SOLARAS) ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இதன் மூலம் நாங்கள் எங்களுடைய காப்புரிமை பெற்றுள்ள நானோ செயற்கோள் தளத்தையும் குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதை நிரூபிப்பதோடு, எதிர்கால திட்டங்களுக்கான தொழில்நுட்ப அமைப்பையும் சரிபார்க்கும் வாய்ப்பாகவும் இது இருக்கும்” என்றார். சென்னை மற்றும் பெங்களுருவில் இயங்கி வரும் இந்நிறுவனம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் ஃபோர்ஜ் இன்னோவேஷன் & வென்ச்சர்ஸ்-ன் (forge innovation & ventures) ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விண்வெளித் தொழில் கொள்கை 2025-ஐ அறிமுகப்படுத்தி, விண்வெளி தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தித் துறையில் மாநிலத்தை முன்னணி மையமாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இக்கொள்கையின் மூலம் ₹10,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, உயர்திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. TIDCO மூலம் தென் தமிழ்நாட்டில் தொழில்துறை வளாகங்கள், பொதுப் பயன்பாட்டு சோதனை மற்றும் உற்பத்தி வசதிகள், திறன் மேம்பாட்டு மையங்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு, மேலும் IN-SPACe அமைப்புடன் இணைந்து தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முயற்சிகள், குலசேகரப்பட்டினம் விண்வெளித் தளத்தின் வளர்ச்சியுடன் இணைந்து, தமிழ்நாட்டை இந்தியாவின் முக்கிய விண்வெளித் தொழில் மையமாக உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன – என்பது குறிப்பிடத்தக்கது.
