தெலங்கானா விடுதியில் கிச்சடி சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

நாகர்கர்னூல்: தெலங்கானாவில் உள்ள பழங்குடியின சிறுவர் விடுதியில், காலையில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவு நச்சுத்தன்மையாக மாறியதே இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று காலை தெலங்கானாவில் உள்ள பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு காலை உணவாக கிச்சடியும், சட்னியும் வழங்கப்பட்டன. உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தின் போது சில மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. பலருக்கு கடுமையான வயிற்று வலியும் உண்டானது.

இதனைப் பார்த்த பள்ளி ஊழியர்கள் உடனடியாக மருத்துவக் குழுவினருக்குத் தகவல் கொடுத்தனர். விடுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்ததாகவும், இதனால் அடுத்தடுத்து மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் முதலில் மன்னனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி பெற்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அச்சம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். “மாணவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது, யாரும் பயப்படத் தேவையில்லை” மருத்துவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நாகர்கர்னூல் மாவட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்தனர். சிகிச்சைக்குப் பின் மாணவர்கள் குணமடைந்து வருவதால், விரைவில் அவர்கள் விடுதிக்கு திரும்புவார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: