திருப்பூர், ஜூலை 10: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2026ம் ஆண்டு திட்ட நிரலில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை ll போன்ற தொகுதி II பணிகளுக்கும் முதுநிலை ஆய்வாளர்,உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் போன்ற தொகுதி II A பணிகளுக்கும் வருகிற 25.10.2026 அன்று முதல் நிலைத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து குரூப் 2, 2ஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் பயிற்சி மையமான உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 20ம் தேதி அன்று காலை 10:30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர்ந்து கொண்டு பயன்பெற கலெக்டர் மனிஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
