தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் வரத்து குறைவு; விலை அதிகம்

 

திருப்பூர், ஜூலை 6: திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடல், டேம் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு விற்பனை செய்யப்பட்டாலும் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் வியாபாரம் தொடங்கி நாள் முழுவதும் நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இங்கு வந்து மீன்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்வது வழக்கம். தற்போது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், அங்கிருந்து வழக்கமாக வரும் வெளிமாநில கடல் மீன்களின் வரத்து முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தமிழக கடலோர பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் தேவைக்காக அதிகளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதன் காரணமாக திருப்பூருக்கு நேற்று 30 டன் கடல் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன. வரத்து குறைந்ததன் காரணமாக, மீன்களின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி வஞ்சிரம் கிலோ ரூ.1,600க்கும், பாறை ரூ.650, புளு நண்டு ரூ.600, பெரிய ஊழி ரூ.580, முரல் ரூ.450, இறால் கிலோ ரூ.400 முதல் 480 வரையும், சங்கரா ரூ.280 முதல் 420க்கும், கிலாத்தி ரூ.370, ஓரா மற்றும் நண்டு ரூ.350, பால் ஊழி ரூ.280, பெரிய கிழங்கா ரூ.230, வாவல் ரூ.1,200க்கு விற்பனையானது.

கடல் மீன்களின் விலை அதிகரித்திருந்தாலும், டேம் மீன்களின் வரத்து தாராளமாக இருந்தது. 60 டன் டேம் மீன்கள் வந்திருந்ததால், அவற்றின் விலையில் பெரிய மாற்றமில்லாமல் கட்லா கிலோ 200 ரூபாய், ரோகு 160 ரூபாய், டேம் பாறை 130 ரூபாய், நெய் மீன் 130 ரூபாய் மற்றும் ஜிலேபி கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் விலை அதிகரித்திருந்தாலும் அசைவப் பிரியர்கள் ஏராளமானோர் வந்து ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: