சென்னை எண்ணூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வித்தை காட்டிய ஆகாஷ், பிரவீன்குமார், தினேஷ் பாபு ஆகிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ரீல்ஸ் மோத்தால் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்குகளோடு இளைஞர்கள் சாலையில் ரேஸ் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக, மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலை, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை மற்றும் ஜவஹர்லால் நேரு சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் பலர் பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் அடையாறு மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டு, சாலை தடுப்பை இழுத்துச் சென்ற வீடியோ வைரலானது. அதை தொடர்ந்து, பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோவில் சாலை தடுப்பை ஒருவர் இழுத்துச் சென்ற வீடியோ வைரலானது. இதையடுத்து வடசென்னையிலும் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணூர் – தாழங்குப்பம் கடற்கரை பகுதிக்கு குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் விடுமுறை நாட்கள் மற்றும் மாலையை நேரங்களில் பொழுது போக்கி செல்கின்றனர். எண்ணூர் – தாழங்குப்பம் கடற்கரை சாலையில், கடந்த சில தினங்களாக தினந்தோறும் இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதோடு, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். பைக் ரேசில் ஈடுபடுவோரால் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

எண்ணூர் – தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இந்த பைக் ரேஸ் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பைக் ரேஸ்சில் ஈடுபடும் இளைஞர்களுடைய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், என சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, எண்ணூர் போலீசார் இன்ஸ்டாவில் வந்த பைக் சாகசம் வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார் என விசாரித்து வந்தனர். இந்நிலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வித்தை காட்டிய ஆகாஷ், பிரவீன்குமார், தினேஷ் பாபு ஆகிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: