மணலி மண்டலத்தில் ரூ.3.50 கோடியில் திட்டமிடப்பட்ட மழைக்கால நிவாரண மைய பணிக்கான ஒப்பந்தம் ரத்து: மீட்பு பணியில் சிக்கல் ஏற்படும் என பொதுமக்கள் வேதனை

 

மணலி: மணலி மண்டலத்தில் ரூ.3.50 கோடி செலவில் திட்டமிடப்பட்ட மழைக்கால பாதுகாப்பு நிவாரண மையம் கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் பொதுமக்களை மீட்டு தங்க வைக்கும் பணியில் சிக்கல் ஏற்படும், என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில், சென்னையில் மழை பாதிப்பு உள்ள இடங்களை அடையாளம் கண்டு, வடிகால் சீரமைப்பு மற்றும் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.

குறிப்பாக, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் நீர்நிலைகளை தூர்வாரி, சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நீர்நிலை அருகே கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது, வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைப்பது, அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது, காய்ச்சலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது, தாழ்வான பகுதிகளில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றும் வகையில், ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைப்பது, நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மணலி மண்டலத்தில் மழைக்கால பாதுகாப்பு நிவாரண மையம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், இந்த பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவித்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மணலி மண்டலத்தில் பாலசுப்ரமணியம் நகர், மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகர், சடையங்குப்பம், பர்ம நகர், இருளர் காலனி போன்ற பல தாழ்வான பகுதிகள் உள்ளன. பெருமழை காலங்களில் தாழ்வாக உள்ள இந்த பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு பாதிக்கப்படுபவர்களை சென்னை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை இணைந்து மீட்டு பள்ளி மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவார்கள்.

இந்நிலையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்படுபவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்து, அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கும் வகையில் கடந்த ஆண்டு மழைக்கால பாதுகாப்பு நிவாரண மையம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி 16வது வார்டு ஆண்டார்குப்பம் மற்றும் 19வது வார்டு எம்எம்டிஏ ஆகிய 2 இடங்களில் சுமார் ரூ3.50 கோடி செலவில் பாதுகாப்பு நிவாரண மையம் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் துவக்கக்கூடிய சமயத்தில் சட்டமன்றத் தேர்தல் வந்ததால் இந்த பணிகளை தேர்தலுக்குப் பின் துவங்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் தேர்தலுக்கு பிறகு, தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மணலி மண்டலத்தில் திட்டமிடப்பட்டிருந்த ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மழைக்கால பாதுகாப்பு நிவாரண மையம் கட்டும் பணிக்கான ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ரத்து செய்தனர். அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பெருமழை காலத்தில் கொசஸ்தலை ஆறு மற்றும் புழல் ஏரியின் உபரி நீர் சூழ்ந்து பாதிக்கப்படும் மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக மழைக்கால பாதுகாப்பு நிவாரண மையம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் தவெக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த திட்டத்தை ரத்து செய்து இருப்பது வேதனைக்குரியது. அடுத்த 2 மாதங்களில் மழை காலம் துவங்க உள்ள நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, உடனடியாக மழைக்கால நிவாரண மையத்தை கட்ட மறு ஒப்பந்தம் கோர வேண்டும்,’ என்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட பல்வேறு பணிகளின் டெண்டர்களை ரத்து செய்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்படும் இந்த நடவடிக்கையால் மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் முடங்கும் நிலை உள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபாதை மற்றும் பராமரிப்பு கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்கள், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்படவிருந்த பேருந்து நிழற்குடைகள், பூங்கா பராமரிப்பு மற்றும் தெருவிளக்குகள் போன்ற பணிகள், புதிய சாலை அமைத்தல் என பல கோடி மதிப்பிலான டெண்டர்களை தவெக அரசு ரத்து செய்துள்ளது. மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள பல கோடி பில் தொகைகள், பல்வேறு புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான டெண்டர்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ஏற்கனவே திட்ட மதிப்பீடுகள் அதிகாரிகள் தயார் செய்யப்பட்ட பல்வேறு பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சாதாரண பணிகளை கூட செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு பணிகளுக்கான பில் தொகையை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் டெண்டர் விட்டால் அதை எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி ரத்து மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளுக்கான மறு டெண்டர் விட வேண்டும், என்றனர்.

அதிகாரிகள் குமுறல்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல மண்டலங்களில் வரி வசூல் செய்ய உதவி வருவாய் அலுவலர் தலைமையில், பில் வசூலிப்பாளர்கள், வரி மதிப்பீட்டாளர்கள், கம்ப்யூட்டர் என்ட்ரி போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். தற்போது சென்னை மாநகராட்சியின் வருவாயை மேம்படுத்த நிலுவையில் உள்ள வரிகளை தீவிரமாக வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொறியியல் பிரிவில் பணியாற்றும் செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களையும் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதால் பொறியியல் துறை அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே, பொறியியல் பணிகளை செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரி வசூல் பணியையும் கூடுதலாக செய்ய நிர்பந்திப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: