ஆற்றங்கரையில் ஒரு காவல் தெய்வம்!

தமிழ்நாட்டுக் கிராமம் ஒவ்வொன்றிற்கும் ஒரு எல்லைத் தெய்வமோ அல்லது காவல் தெய்வமோ பெரும்பாலும் இருக்கும். அவற்றின் பின்னணியில் இருக்கும் உண்மை வரலாறு ஒன்று சோகமாகவோ அல்லது வதம் செய்தோ இருக்கலாம். ஆனால், இரண்டும் கலந்த, மனதைப் பதைபதைக்க வைக்கும் உண்மை வரலாறே பின் வருவது…

ஆனைமலை அடிவாரத்தில் பளிங்கு போல் ஓடிக் கொண்டிருந்த உப்பாறு எனும் ஆற்றில், தன்னை மறந்து நீந்திக் கொண்டிருந்தாள் பதுமை போன்ற பருவமங்கை, மாசாணி.  ஆற்று நீரில் மிதந்து வந்த ஒரு மாங்காயைத் தன் கையில் எடுத்து ஒரு கடி கடித்தாள், மாசாணி. அதன் சுவையில் மதி மயங்கியவள், மேலும் கடிக்க முற்படுகையில், ‘ஆ…..’ என்று அலறி நிலைகுலைந்து போனாள்! யார்தான் அப்படி அலறமாட்டார்கள் – தன் பிடரியில் வலுவான ஓர் அடி விழுந்தால்? திரும்பிப் பார்த்த மாசாணி, பயத்தில் உறைந்தே போனாள். மேலும், கன்னத்தில் ஓர் அறை அறைந்தான் அந்த முரடன். வலியினால் துடித்தாள், மங்கை.

“முட்டாள் பெண்ணே! இது யாருடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி என்று தெரியுமா?” என்று காவலாளி கேட்டான்.“ஏன் தெரியாமல்? உங்கள் செய்கையின் கொடுமையிலேயே தெரிகிறதே, இது இரக்கமற்ற கொடியவன் நன்னனின் பகுதியென்று!”

தெரிந்துமா தவறு செய்தாய்?”
“நான் என்ன தவறு செய்தேன்?’’
“நீரில் மிதந்து வந்த மாங்காயை எடுத்துக் கடித்தாயே.. அது தவறன்றி வேறென்ன?”

“ஒரு மாங்காயைக் கடித்தது தவறென்று இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதுவும் ஆற்றில் தானாகவே மிதந்து வந்த மாங்காயை!” என்று கோபத்தோடு மாசாணி பதில் கூறினாள்.
“அதிகம் பேசுகிறாய் – உண்மை தெரியாமல்! மாங்காய் ஆற்றில் மிதந்து வந்ததுதான், ஆனால் அந்த ஆறு ஒடிக் கொண்டிருப்பது எங்கள் அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் எனத் தெரியவில்லையா? எனவே அதில் மிதந்து வரும் எந்தப் பொருளும், ஏன் நீ கடித்தாயே அந்த மாங்காய் உட்பட, எங்கள் மன்னன் நன்னனுக்குத்தான் சொந்தம் எனத் தெரிந்து கொள்!” என்றான் காவலன்.

“விந்தையிலும் விந்தையான உரிமைக் கொண்டாட்டம்! வெறும் ஒரு அல்ப மாங்காய் தானா உங்கள் மன்னனுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்?” என வாலிபத்துடுக்கில் மோதினாள் பேதை, என்ன காத்துக் கொண்டிருக்கிறது எனத் தெரியாமல்!“திமிர் பிடித்தவளே, வா… எங்கள் அரண்மனைக்கு” என்று அவளின் கூந்தலைப் பிடித்து இழுத்துச் சென்றான், கொடியவன். அரைகுறை ஆடையுடன், உடலில் ஈரம் சொட்டச் சொட்ட, வாய் கதறக் கதற, உடன் நீராட வந்த தோழிகள் மறைந்திருந்து பயத்துடன் கண்ணீர் வடிக்க, மாசாணியை அழைத்துக் கொண்டு, நன்னன் முன் நிறுத்தினான், அந்தப் பாதகன்.

அதன் பின், “அரசே, இவள் நம் எதிரிகளின் நாட்டை சேர்ந்தவள். வேவு பார்க்க வந்தவள். அவர்களை நம் மீது படையெடுத்து வரச் சொல்லும் சமிக்ஞையாக, நீரில் மிதந்து வந்த மாங்காயைக் கடித்தாள். விசாரித்து உரிய தண்டனை தரவேண்டுகிறேன்’’ எனத் தூபம் போட்டான் காவலாளி.“விசாரணை குற்றவாளிகளுக்குத்தான், ஒற்றர்களுக்கு அல்ல. பிங்கொனாம் பாறை இவள் உதிரத்தை அருந்தி தாகம் தீர்த்துக் கொள்ளட்டும். இழுத்துச் செல்லுங்கள்!” எனக் கர்ஜித்தான் நன்னன்.

செய்தி கேட்டு ஓடோடி வந்தனர் மாசாணியின் பெற்றோர். நன்னனின் காலில் விழுந்து தங்கள் சொத்து முழுவதையும் எடுத்துக் கொண்டு, தங்கள் மகளை விட்டுவிடும்படி கெஞ்சினர். ஆனால், சொத்துகளை எடுத்துக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டான், நன்னன். பிங்கொனாம் பாறையின் மீது வைக்கப்பட்டு ஒரே வெட்டில் கழுத்து வேறு உடல் வேறாக இரு துண்டாக்கப்பட்டாள், மாசாணி. திரும்பிப் போக முற்பட்ட காவலர்கள், “நில்லுங்கள்” என உறுதியான குரல் ஒன்று கேட்க, திகைப்புடன் திரும்பி நோக்கினர்.

கண்ட காட்சி அவர்களை அப்படியே உறைய வைத்தது.“கொடியவர்களே, ஒரு குற்றமும் செய்யாத என்னைக் கொலை செய்த உங்கள் எல்லோருடைய அழிவும் விரைவில் ஆரம்பமாகும். இந்த மாசாணியின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள்!” என்று கர்ஜித்தது மாசாணியின் வெட்டப்பட்ட உதிரம் சொட்டும் கழுத்தின் மேலேயிருந்த செம்பவள வாய். மறுபக்கத்தில் கிடந்த அவளுடைய உடல் ரத்த வெள்ளத்தில் துடித்த பின், மெதுவாக அடங்க ஆரம்பித்திருந்தது.

அடுத்த நொடி நிச்சயமில்லாத இந்த வாழ்விற்கு உதாரணமாய்ப் போனாள் அப்பாவி மங்கை. மர்மமான முறையில் கால்நடைகள் இறந்தன. காரணமில்லாமல் பெண்களுக்குப் பேய் பிடித்தது. குழந்தைகள் பிறப்பது நின்று போயிற்று. இரவில் எங்கிருந்தெல்லாமோ விதம் விதமான பெரும் ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. மக்கள் நடுநடுங்கிப் போய் ஊரில் வாழவே அச்சப்பட்டனர். மாசாணியின் உடன் இருப்போர், நன்னனை விரட்டி நாட்டை கைப்பற்றினர். ஊர்ப் பஞ்சாயத்துகூடி, கோடாங்கியை அழைத்துக்குறி கேட்க, அவர் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டனர். கோடாங்கி உடலில் உக்கிரமாக, மாசாணி இறங்கினாள்.

“அப்பாவியான என்னைக் கொலை செய்தவர்களைப் பழி வாங்க வந்துள்ளாள். உப்பாற்றங்கரையில் நீதிக்கல் எடுத்து மிளகாயை அரைத்துப் பூசுங்கள். அபிஷேக சாமிக்கு எண்ணெய் பூசினால் நான் குளிர்ந்துவிடுவேன். சுடுகாட்டு மண், சாம்பல், எலும்பு ஆகியவைகளைக் கலந்து பதினேழு அடி நீளத்தில் என் உருவம் செய்து படுக்க வையுங்கள். கன்னத்தில் அடிபட்ட வடு இருக்கட்டும்.

தை மாதம் அமாவாசையன்று நட்டநடுப் பகலில் என்னைக் கொலை செய்ததன் அடையாளமாக அந்த நேரத்தில் எனக்கு விசேஷ பூஜை செய்தால், சாமியாடியின் மேல் நான் இறங்கி குறி சொல்வேன். நியாயமான வேண்டுதலை மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றி வைப்பேன். அதே சமயம், குற்றவாளிக்கு உக்கிரமான தண்டனையும் கொடுப்பேன். இனி நானே உங்கள் காவல் தெய்வம், எல்லைத் தெய்வம், உங்களையெல்லாம் கண் போன்று காக்கப் போகும் தெய்வம்!” என்று மேலும் சில சடங்குகள் செய்யச் சொல்லி முடித்தபின் சுயநினைவிற்கு வந்தார், கோடாங்கி.

மாசாணி கூறியபடி அவள் உருவம் பதினேழு அடியில் செய்யப்பட்டு கிடத்தப்பட்டது. அமாவாசையன்று பூஜைகள் ஆரம்பமாயின. உப்பாற்றங்கரையில் காவல் தெய்வமாக நின்று மக்களைக் காப்பாற்ற ஆரம்பித்தாள், மாசாணி. நீதிக்கல் மீது மிளகாய் அரைத்துப் பூசி வேண்டினால், வேண்டுதல் நியாயமாக இருக்கும் பட்சத்தில், மூன்று மாதங்களுக்குள் நீதி கிடைக்கச் செய்தாள். அமாவாசையன்று நடைபெறும் மயான பூஜையில் பங்கேற்பவர்களுக்கு, வேண்டும் வரத்தையெல்லாம் வழங்கினாள். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் சரியாயின. கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறியது. சுருங்கச் சொல்லின், ஒவ்வொரு குடும்பத்தின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமே தந்தாள், மாசாணி.

கைகளில் கபாலம், பாம்பு, திரிசூலம், உடுக்கை ஆகியவைகளைக் கொண்டு வானம் பார்த்த நிலையில் படுத்திருக்கும் இந்த தெய்வத்தின் முன் நாம் போய் நின்றாலே போதும், நம் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து போகும். நேரம் வந்துவிட்டதை உணரலாம்.

ஆலயச் சிறப்புகள்: அமாவாசை, செவ்வாய், வெள்ளிக் கிழமை மற்றும் தை மாதத்தில் பதினெட்டு நாட்கள் திருவிழா நடைபெறும். சூலத்தைச் சுற்றி வருதல், பெண்களின் மாதவிடாய் பிரச்னை, பில்லி சூனியம் போன்ற குறைகளை களைந்து காத்தருளுகிறாள்.

திறந்திருக்கும் நேரம்: காலை 6:00 – 1:00, மாலை 4:00 – 8.30.

இருப்பிடம்: கோவை மாவட்ட முக்கிய நகரமான பொள்ளாச்சி நகரிலிருந்து, சுமார் 14 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உண்டு.

கோயில் தொடர்புக்கு: 04253 282337.

பி.ராஜன்

Related Stories: