இறைவனும் மனிதனும்

பகுதி 4
மனிதன், தன் செயல்களிலும் நோக்கங்களிலும் தடுமாறாமல் இருக்கவே ஆன்மிகம். ஆனால், அதனை உலகியல் சுகங்களும், அஞ்ஞானமும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடியாமல் செய்துவிடுகின்றன. ஆன்மிகம் என்பது ஏதோ உலகை விடுத்து ஓடுவதல்ல; அது நம் அகத்தை செம்மைப்படுத்தி, செயல்களில் நேர்மையையும், நோக்கங்களில் தெளிவையும், மன உறுதியையும், தருவதற்காக உருவான ஒரு கவசம். ஆனால், இரண்டு முக்கிய தடைகள் மனிதனை அந்தப் பாதையில் செல்லவிடாமல் தடுத்து விடுகின்றன.
உலகில் உள்ள தற்காலிக இன்பங்களும், மாயைகளும் மனித மனதை எளிதில் கவர்ந்துவிடுகின்றன. ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது, நோக்கம் தூய்மையானதாக இருந்தாலும், இடையில் கிடைக்கும் சிற்றின்பங்களும், பேராசையும் அந்த நோக்கத்தைத் திசை திருப்பிவிடுகின்றன.
நிலையற்ற சுகங்களை நிலையானது என்று நம்பி, மனிதன் தன் இலக்கிலிருந்து தடுமாறி, ஆன்மிக விழிப்புணர்வை இழந்து விடுகிறான். அஞ்ஞானம் என்பது வெறும் படிப்பறிவில்லாமை அல்ல; அது “எது நிலையானது, எது நிலையற்றது’’ என்பதைப் பகுத்தறிய முடியாத ஆன்ம அறியாமை. இந்த அஞ்ஞானம் மனிதனை சுயநலம், கோபம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளுக்குள் தள்ளி விடுகிறது.
நான், எனது என்ற அகந்தையால், தன் செயல்களின் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதன் தடுமாறுகிறான். சுழலும் காற்றில் அகப்பட்ட விளக்குத் திரி போல மனம் தடுமாறும்போது, அதை அணையாமல் காக்கும் அரணாக ஆன்மிகம் இருக்க வேண்டும்.
ஆனால், உலகியல் சுகங்களும் அஞ்ஞானமும் அந்த அரணையே மறைத்துவிடுகின்றன என்பதுதான் மனித வாழ்வின் பெரிய சவால். இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். பசி, பயம், தூக்கம், இனம் பெருக்குதல் ஆகிய நான்கும் மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் பொதுவானவை. ஒரு பறவையோ அல்லது சிங்கம் போன்ற விலங்கோ தன் வாழ்நாள் முழுவதும் `இரை தேடுவதோடு’ தன் எல்லையைச் சுருக்கிக் கொள்கிறது. அதற்குப் பின்னால் எந்த தத்துவத் தேடலும் இல்லை. இறைதேடுதல் மனிதனுக்கே மட்டுமே உரியது. இரை – உணவு – மட்டுமே நோக்க மென்றால் மனிதனாக படைப்பின் பரிணாமம் உயர்ந்திருக்க வேண்டாம். விலங்கிலிருந்து சிந்திக்கும் மனிதனாக வந்தவன் அடுத்த நிலை எது என்று தெரிய வேண்டும்.
வயிறு நிறைந்த பிறகும் மனிதனுக்குள் எழும் “நான் யார்? என் வாழ்வின் நோக்கம் என்ன? மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கிறது?’’ என்ற கேள்விகள்தான் அவனுடைய உண்மையான தேடலின் தொடக்கம். இயற்கையின் விதிகளின்படி, உடல் ரீதியான பரிணாமம் (Physical Evolution) மனிதனோடு ஒரு நிறைவை எட்டிவிட்டது. இனி மனிதனுக்குத் தேவைப்படுவது மனரீதியான மற்றும் ஆன்ம ரீதியான பரிணாமம் (Consciousness Evolution). விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு வந்தவன், அடுத்ததாகத் தன் அக உணர்வில் உயர்ந்து `மனித நேயமிக்க, பேரன்பு கொண்ட, இறையுணர்வுடைய’ உன்னத நிலையை அடைய வேண்டும். அந்த அடுத்த கட்டப் பயணத்திற்கான ஒரு வரைபடமும் வழிகாட்டியும்தான் ஆன்மிகம்.
“உண்ணும் உணவால் உடல் வளர்கிறது. ஆனால், தேடும் தேடலால் மட்டுமே ஆன்மா மலர்கிறது’’ ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய மனிதன், தன்னிடம் இருக்கும் மிக உயர்ந்த சிந்திக்கும் ஆற்றலைத் தலைகீழாகப் பயன்படுத்தி, மீண்டும் `இரை தேடும்’ (பொருள், சொத்து, ஆடம்பரம், அதிகாரம் சேர்க்கும்) விலங்கியல் போட்டிக்குள்ளேயே தன்னைச் சுருக்கிக் கொள்கிறான். இதனால்தான் அவனுக்குள் பெரும் தடுமாற்றமும் நிம்மதியற்ற தன்மையும்
உருவாகின்றன.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடைந்த `சிந்திக்கும் ஆற்றல்’ அவனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அவனையே சுயமாக அழித்துக் கொள்ளும் அஞ்ஞானப் பாதையில் திருப்பிவிடுகிறது.
இந்த விஷயத்தை நாம் இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். எது ஒன்று மிகப்பெரிய ஆற்றலோ நன்மையோ அதிலேயே மிகப்பெரிய தீமையும் ஆபத்தும் இருக்கிறது. எது மிகப்பெரிய தீமையோ, அதற்குள் மிகப்பெரிய நன்மையும் ஒளிந்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் பெரிய நியதிகளில் ஒன்று இது. `முரண்பாடுகளின் சமநிலை’ (Law of Polarity) அல்லது `இருமையின் தத்துவம்’ (Duality) என்பார்கள்.
எந்த ஒன்றில் நன்மையின் உச்சம் இருக்கிறதோ, அதே புள்ளியில் தீமையின் ஆழமும் ஒளிந்திருக்கிறது. கத்தியைக் கொண்டு ஒரு மருத்துவர் உயிரைக் காப்பாற்றவும் முடியும், அதே கத்தியைக்கொண்டு ஒரு கொலையாளி உயிரைப் பறிக்கவும் முடியும். ஆற்றல் ஒன்றே, ஆனால் அதை நாம் கையாளும் விதத்தில்தான் எல்லாமே இருக்கிறது. இந்த விஷயத்தைக் கையாள்வதில் உள்ள சிக்கல் இன்றைய பல சமூக அழிவுகளுக்கு காரணமாக இருக்கிறது. மனிதனின் நோய், பிணிகளை நீக்கி, மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களைக் காப்பாற்றி, மனித வாழ்நாளை நீட்டிக்கும் உன்னதக் கலை மருத்துவம்.
இன்று அதே மருத்துவம், ஒரு பெரும் `வணிகமாக’ மாறும்போது, எளிய மனிதர்களைச் சுரண்டும் கருவியாக மாறுகிறது. உயிரைக் காக்கும் மருந்தே, பேராசை காரணமாகப் போலி மருந்துகளாகவும், தேவையற்ற சிகிச்சைகளாகவும் மாறி மனிதகுலத்திற்கு ஆபத்தாக முடிகிறது.
ஒரு மனிதனை விலங்கு நிலையிலிருந்து சிந்திக்கும் உன்னத மனிதனாக மாற்றுவது கல்வி. அது அறியாமை என்னும் அஞ்ஞானத்தை நீக்கி ஒளியைத் தருகிறது. ஆனால், இன்றைய கல்வி, மனிதனுக்கு `அறிவை’ மட்டுமே ஊட்டுகிறதே தவிர, `அறத்தை’ ஊட்டுவதில்லை. அறமற்ற கல்வி, ஒரு மனிதனை மிகவும் புத்திசாலியான, தந்திரமான குற்றவாளியாக மாற்றுகிறது. அணு ஆயுதங்களை உருவாக்கியதும், இணையவழிக் குற்றங்களை செய்வதும் உலகிலேயே மிகச் சிறந்த கல்வி கற்ற மூளைகள்தான் என்பது இதன் ஆகப் பெரிய முரண்பாடு. தலைகீழாகப் பார்த்தால், மிகப்பெரிய தீமை என்று நாம் நினைக்கும் இடத்திலும், ஒரு நன்மை ஒளிந்திருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு மிகப்பெரிய சமூகப் பேரழிவோ அல்லது நோய்த்தொற்றோ (Pandemic) ஏற்படும் போதுதான், மனிதர்களிடையே இருக்கும் சுயநலம் மறைந்து, எல்லையற்ற மனிதநேயமும், ஒற்றுமையும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் பிறக்கின்றன.
மனிதன், ஆற்றலையும் வசதிகளையும் பெருக்கிக்கொண்ட அளவிற்கு, அவனது அக முதிர்ச்சியும் விழிப்புணர்வும் வளரவில்லை. அரசியல், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் இருக்கும் இந்த இருமுனைக் கத்தியை, தீமையின் பக்கம் சாயாமல் நன்மையின் பக்கமே நிலைநிறுத்த, இன்றைய தலைமுறைக்கு தேவைக்கான `அகப் பயிற்சி’ அல்லது `சிந்தனை மாற்றம்’ தான் ஆன்மிகம்.

Related Stories: