பொதுவாக பூஜை அறையில் எந்த வண்ணம் அடிப்பது நல்லது?

?ஒரு குழந்தைக்கு எந்த வயது முதல் ஜாதகம் பலிக்கும்?
– வண்ணை கணேசன், சென்னை.
பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலையிலும் ஜாதகம் என்பது தன் பணியைச் செய்துகொண்டுதான் இருக்கும். இந்த உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் நவகிரஹங்களின் பங்களிப்பு என்பது நிச்சயமாக உண்டு. ஒரு வயது முடியும் வரை கடவுளின் குழந்தையாகவும் குலதெய்வம் கோயிலில் மொட்டை அடித்து காதணி விழா செய்கின்ற நாள் முதலாக அந்தக் குழந்தை நமது குழந்தையாகவும் ஆகிவிடுவதால், ஒரு வயது பூர்த்தியான பின்பு ஜாதகம் எழுதும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குழந்தை இந்த பூமியில் ஜனித்த தருணத்தில் இருந்தே கிரகங்கள் தனது பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன.
?பாவம் புண்ணியம் என்பது என்ன?
– சு. பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
மற்றவர்களை பாதிக்கின்ற விஷயம் பாவம் என்றும் அடுத்தவர்கள் மனம் மகிழக் கூடிய வகையில் தர்மத்திற்கு உகந்தாற்போல் செய்கின்ற செயல்கள் புண்ணியம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி நாம் வாழ்வது என்பது பாவம். உழைக்கின்ற வர்க்கத்திற்கு நம்மாலான உதவியைச் செய்வது என்பது புண்ணியம்.
?சாப்பிட்ட பின் தட்டில் கை கழுவக் கூடாது என்று சொல்வது ஏன்?
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.
சாப்பிடும் தட்டிற்கு போஜன பாத்திரம் என்று பெயர். அது அமுதத்தை நமக்கு அளிக்கும். அமுதசுரபியாகப் பார்க்கப் படுகிறது. அதனை நாம் சுத்தபத்தமாக அலம்பி வைக்க வேண்டுமே தவிர, அந்த தட்டிலேயே கையைக் கழுவினால் அதுவும் நம்மை கைகழுவி விடும். அதாவது நேரத்திற்கு உணவருந்த இயலாதுபோய், உடல்நிலை என்பது பாதிக்கப்படும் என்பதால் சாப்பிட்ட தட்டிலேயே கை அலம்புவது என்பது கூடாது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள்.
?பெரும்பாலான சித்தர்களின் ஜீவ சமாதிகள் மீது ஏன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது?
– ஏ. மூர்த்தி, திருவள்ளூர்.
சித்த புருஷர்களுக்கு மரணம் என்பது இல்லை. ஜீவ சமாதி என்கிற வார்த்தையில் இருந்தே அதன் உட்கருத்தினைப் புரிந்து கொள்ளலாம். அவர்களுடைய பூத உடல் என்பது மறைந்திருந்தாலும் அவர்களது ஜீவாத்மா என்பது அந்த பரமாத்மாவுடன் ஒன்றாக கலந்திருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக சிவலிங்கம் என்பது பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
?பொதுவாக பூஜை அறையில் எந்த வண்ணம் அடிப்பது நல்லது?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.
வெள்ளை நிற வண்ணம் அடிப்பதே சாலச் சிறந்தது. ஓரத்தில் பார்டர் ஆக காவி நிற வண்ணத்தையும் பயன்படுத்தலாம். வெள்ளையும் சிகப்பு நிற காவியும் ஆன்மிகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
?சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கு குலதெய்வ வழிபாடு பலன் தருமா?
– பி.கனகராஜ், மதுரை.
நிச்சயமாக பலன் தரும். சனி, ராகு-கேது என எந்த கிரகமாக இருந்தாலும் அனைத்து கிரகங்களுக்குமே எஜமானன் இறைவன் தான். கிரகங்கள் இறைவனின் பணியாளர்கள், அவ்வளவே. இந்தக் கருத்தினை மனதில் ஆழப்பதிய வையுங்கள். மேலும் சனியை பகவான் என்று அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. பகவான் என்ற சொல் இறைவன் ஒருவனுக்கே பொருந்தும். நவகிரகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் இவை அனைத்தும் இறைவனின் பரிவாரங்கள். ஆலயத்தில் இவர்களை பரிவார தேவதைகளாக மட்டுமே பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஒரு அரண்மனை என்று இருந்தால் அங்கே அரசன், அரசி, இளவரசன், மந்திரிகள், தளபதிகள் மற்றும் பணியாளர்கள் இருப்பதுபோல ஆலயத்திலும் பரிவார தேவதைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். பகவான் என்ற சொல் அந்த மூலவருக்கு மட்டுமே பொருந்தும். எந்த கிரகத்தின் தாக்கத்தினைப் பெற்றிருந்தாலும் குலதெய்வத்தின் வழிபாடு என்பது நிச்சயமாக பலனைத் தரும். இதிலே எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?தண்ணீருக்கு மனோசக்தியை அதிகரிக்கும் திறன் உண்டா?
– ஜெ.மணிகண்டன், வேலூர்.
நிச்சயமாக உண்டு. நவகிரஹங்களில் சந்திரனைத் தான் மனோகாரகன் என்று அழைப்பார்கள். நம்முடைய மனதினை ஆள்வது சந்திரன் என்கிற கிரஹம்தான். உதாரணத்திற்கு நீங்கள் மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்தவர் என்று சொன்னால் நீங்கள் பிறந்த தேதியில் சந்திரன் என்கிற கிரகம் மகம் நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார் என்பதே பொருள். சந்திரன் எந்த நட்சத்திரக் காலில் சஞ்சரிக்கும்போது நாம் பிறந்தோமோ அதுவே நமது ஜென்ம நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறது. பிறந்த நேரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே நமது ஜென்ம ராசியாகவும் அமைகிறது. சந்திரனின் அமைவிற்கு ஏற்பதான் நம்முடைய மனமும் செயல்படும் என்பதால்தான் நாம் ராசிபலனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சந்திரன் என்கிற கிரகம்தான் தண்ணீருக்கும் அதிபதி. ஆக தண்ணீரைப் பருகுவதன் மூலம் மனதிற்கு ஆக்க சக்தி என்பது கிடைக்கிறது. அதனால்தான் நம்வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் அவர்களை அமர வைத்து அவர்கள் குடிப்பதற்கு தண்ணீரைத் தருகிறோம். அவர் எந்த ஒரு மனநிலையில் நம் வீட்டிற்குள் வந்தாலும் அவர்களின் மனது சாந்தமடையும் விதமாக இந்த தண்ணீரானது செயல்படுகிறது. வந்தவருக்கு முழுமையான மனநிம்மதியையும் தருகிறது.
?துன்பம் நேர்கையில் மனதை எவ்வாறு சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்?
– எஸ்.வஜ்ரவடிவேல், கோவை.
‘‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா…’’ என்ற கவிஞரின் பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது. துன்பம் நேர்கையில் அழகான மெல்லிசையைக் கேளுங்கள். ஒரு குவளை வெறும் தண்ணீரை அருந்துங்கள். சந்திரனின் ஆதிக்கத்தைப் பெற்ற தண்ணீரை அருந்துவதால் மனம் அமைதி அடைகிறது. சுக்ரனின் ஆதிக்கத்தைப் பெற்ற இசையைக் கேட்பதால் மனதிற்கு இன்பம் என்பதும் கிடைக்கிறது. சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆழ்மனம் எனும் ஆன்மா வலிமை பெறுகிறது.
?வீட்டில் வவ்வால் பறந்தால் ஏதேனும் கெடுதல் உண்டாகுமா?
– ஆ. மலர்தாசன், விருத்தாசலம்.
பழமையான மற்றும் தூய்மையற்ற பொருட்கள் நிறைந்திருக்கும் இடத்தில்தான் வவ்வால் வாசம் செய்யும். அப்படி இருக்க வீட்டிற்குள் வவ்வால் வருகிறது என்று சொன்னால் நம்வீடு தூய்மையாக இல்லை என்பதுதானே பொருள். வீடு தூய்மையாக இல்லை என்று சொன்னால், அது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளைவிக்கத்தானே செய்யும்? உடல் ஆரோக்யம் என்பது கெடும் அல்லவா… இதன் அடிப்படையில்தான் வீட்டினில் வவ்வால் பறந்தால் கெடுதல் உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பிவைக்கவும்.ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.

Related Stories: