மேகதாது விவகாரம் – கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கி இருப்பதாக அங்கு நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் கர்நாடக அரசு மீது தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் டிடிவி தினகரன், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராக கர்நாடக அரசு செயல்படுவதோடு, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரை உரிய நேரத்தில் தர தொடர்ந்து மறுத்து வருகிறது. தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த கட்டுமான பணிகளின் மூலம் மேகதாது அணையை கட்டும் முடிவிலிருந்து கர்நாடக அரசு துளியளவும் பின்வாங்க போவதில்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் காட்டும் தீவிரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மேகதாது பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியாவது உணர வேண்டும். எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்திட முதல்வர் விஜய்யை கேட்டு கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: