சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் நாளை 95.94 சதவீதம் பேர் எழுதினர். சிறப்பு டெட் 2வது தாள், முதல் தாள் தேர்வைப்போலவே கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயம் ஆகும். இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள்-1ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2ம் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், புதிதாக ஆசிரியர் பணிக்கு சேருவோருக்கு மட்டுமின்றி ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுளது. டெட் தேர்ச்சிக்கு 2028 என காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் பணியில் தொடர முடியும். பதவி உயர்வுக்கும் டெட் தேர்ச்சி அவசியம். உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் முதலாவது தாள் தேர்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடந்தது. இத்தேர்வை 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு கடினமாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் 2வது தாள் தேர்வு தமிழகம் முழுவதும் 613 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பேர் எழுதினர். சென்னையில் புரசைவாக்கம் லேடி எம்சிடிஎம் மேல்நிலைப்பள்ளி, தி. நகர் கர்நாடகா சங்கம் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 38 மையங்களில் ஏராளமான ஆசிரியர்கள் தேர்வெழுதினர்.
தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். 9.30 மணிக்குப் பிறகு வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தேர்வு மையங்களுக்கு மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மேலும், பெல்ட், ஷூ மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து தேர்வு அறைக்குள் நுழையவும் அனுமதி வழங்கப்படவில்லை.
சிறப்பு டெட் 2வது தாள் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர். குறிப்பாக, தமிழ், ஆங்கிலம், கல்வி உளவியல் ஆகிய பகுதிகளில் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டதாக அவர்கள் கூறினர். டெட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 150க்கு 90 மதிப்பெண்ணு்ம், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 75 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி ஆகியோர் 60 மதிப்பெண்ணும் பெற வேண்டும்.
