- நிதி ஆயோக் 2021ல் வெளியிட்ட எத்தனால் கொள்கை அறிக்கையில் இருந்த கணிப்புப்படி, 2025-26ல் பெட்ரோலில் 20% கலப்பதற்காக தேவைப்படும் எத்தனால் 1,016 கோடி லிட்டர்
- ஒரு லிட்டர் கரும்பில் இருந்து எத்தனால் எடுக்க தேவைப்படும் தண்ணீர் 2,860 லிட்டர்
- இ20 தேவைக்கான பெட்ரோல் அனைத்தும் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டால் தேவைப்படும் தண்ணீர் 29.06 லட்சம் கோடி லிட்டர்
ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, 2018ம் ஆண்டில் தேசிய உயிரி எரிபொருள் கொள்கை வகுக்கப்பட்டது. அதில், பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 2030ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் (இ 20) என்ற அளவை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஒன்றிய அரசு முன்வைத்த முக்கியக் காரணங்கள் – கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் அந்நிய செலாவணியைக் குறைப்பது ஆகியவை. ஆனால், இ20 பெட்ரோல் இலக்கை 5 ஆண்டு முன்னதாக, அதாவது 2025-26க்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பு 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இ20 எரிபொருளை நாடு முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்தன.
இந்தியாவில் இ20 பெட்ரோல் முதன்முறையாக 2023ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விற்பனை தொடங்கியது. பின்னர், நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. எத்தனால் உற்பத்திக்கு பிரதான ஆதாரணமாக இருப்பது கரும்பு பயிர் தான். இதற்கு முக்கியக் காரணம், கரும்பு சார்ந்த பொருட்களை எத்தனாலாக மாற்றுவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு சர்க்கரை ஆலைகளில் ஏற்கெனவே இருப்பதுதான். அதேவேளையில், தண்ணீர் பயன்பாடு அதிகமுள்ள பயிர்களில் ஒன்றாக கரும்பு உள்ளது. எத்தனால் கொள்கை மூலம், வழக்கமாக சர்க்கரை உற்பத்தியை மட்டுமே நம்பியிருந்த கரும்பு விவசாயத்துக்கு ஒன்றிய அரசின் எத்தனால் கொள்கை மிகப்பெரிய எரிபொருள் சந்தையையும் உருவாக்கிக் கொடுத்தது.
கரும்பை அடிப்படையாகக் கொண்ட எத்தனால் உற்பத்தியை, எரிபொருள் உற்பத்தி என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டும் மதிப்பிடுவது போதுமானதல்ல என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்குப் பதிலாக, கரும்பு எந்தப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது, அந்தப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்கும் நிலை என்ன, நிலத்தடி நீரின் நிலை எவ்வாறு உள்ளது என்பவற்றுடன் இணைத்தே கரும்பு சார்ந்த எத்தனால் உற்பத்தியின் நிலைத்தன்மையை மதிப்பிட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தியா இன்னும் அதிக இலக்குகளைக் கொண்ட எத்தனால் கலப்பு (இ20, இ27, இ 85) திட்டங்களை நோக்கி முன்னேறி வரும் நிலையில், எரிசக்தி பாதுகாப்புக்கும் நிலையான நீர்வள மேலாண்மைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது முக்கிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தின் 2025ம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 40,775 கன மீட்டர் தண்ணீர் பயன்பாட்டுக்காக எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில், மழைநீர் மூலம் ஆண்டுக்கு 44,852 தண்ணீர் நிலத்திற்குள் செல்கிறது.
இதுபோல், இந்தியாவில் எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு தொடர்பாக நிதி ஆயோக்கும், ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, கரும்பில் இருந்து ஒரு கிலோ சர்க்கரை எடுக்க தோராய தண்ணீர் செலவு (சாகுபடியுடன் சேர்த்து) 1,600 முதல் 2,100 லிட்டர் வரை இருக்கும். இதன்மூலம் ஒரு லிட்டர் எத்தனால் எடுக்க தோராயமாக 2,860 லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சில கணக்கீடுகளில் இது 3,500 லிட்டருக்கும் அதிகமாக உள்ளது. நாட்டின் மொத்த கரும்புச் சாகுபடிப் பரப்பில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் மட்டும் சுமார் 81 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. இவற்றில் மகாராஷ்டிராவில் வறட்சியாக உள்ளது மராத்வாடா மண்டலம். இங்கு வறட்சி அபாயமுள்ள தாராஷிவ், பீட், லத்தூர் மற்றும் தண்ணீர் தேவை அதிகமுள்ள சோலாப்பூர் மற்றும் அகில்யாநகரிலும் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் முசாபர்நகர், ஷாம்லி, மீரட், சகாரன்பூர், பிஜ்னோர், பாக்பத் உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்பு மற்றும் பிற பாசனப் பயிர்களுக்காக அதிக நீர் எடுக்கப்படுவதால் ஷாம்லி, சகாரன்பூர் போன்ற கரும்பு சாகுபடி பகுதிகளில் நிலத்தடி நீர்தேவை அதிகரிப்பால் முசாபர்நகர், பாக்பத், ஷாம்லி, மீரட் ஆகிய மாவட்டங்கள் நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கரும்பு சாகுபடியில் 3வது மாநிலமான கர்நாடகாவை பொறுத்தவரை, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுரகி மற்றும் மண்டியாவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இவற்றில் பாகல்கோட், விஜயபுரா, கலபுரகி பகுதிகள் வறட்சி அபாய பகுதிகளாக உள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1.31 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இது நாட்டின் மொத்த கரும்பு சாகுபடியில் சுமார் 2.4 சதவீதம் என ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் 2024-25ம் ஆண்டுக்கான மாநில வாரியான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் – ராணிப்பேட்டை பகுதி, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோட்டில் வறட்சி உள்ளபோதும், கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் எத்தனால் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, கரும்பு சாகுபடி செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் தற்போது குவிண்டாலுக்கு குறைந்த பட்ச கொள்முதல் விலையாக ரூ.355 வழங்கப்படுகிறது. 2026-27 பருவத்தில் அக்டோபர் முதல் இது ரூ.365ஆக உயர்த்தப்பட உள்ளது. 2018-19ல் தேசிய உயிரி எரிபொருள் கொள்கை கொண்டு வந்தபோது ஒரு குவிண்டால் ரூ.275. இ20 இலக்கு முன்கூட்டியே மாற்றப்பட்ட 2020-21ல் குவிண்டால் ரூ. 285. தேசிய உயிரி எரிபொருள் கொள்கை வகுக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை குவிண்டாலுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இது 29 சதவீத உயர்வாகும். வரும் அக்டோபர் முதல் ரூ.365 கொள்முதல் விலை அமலுக்கு வந்தால் உயர்வு ரூ.90 அல்லது 32.7 சதவீதம் ஆகிவிடும்.
இவ்வாறு அதிக வருமானம் மற்றும் உறுதியான கொள்முதல் வாய்ப்பை எதிர்பார்த்து விவசாயிகள் கரும்பு உள்ளிட்ட எத்தனால் மூலப்பொருள் பயிர்களை நோக்கி நகரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் நீர்வளம் மிகுந்த பகுதிகளில் நீர் வறட்சியையும், ஏற்கெனவே வறட்சி அல்லது தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் கடும் வறட்சியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக வேளாண் துறை சார்ந்த நிபுண்கள் சிலர் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஏற்கெனவே 50 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது.
இந்நிலையில், இ20 தேவைக்காக கரும்புச் சாகுபடி மேலும் விரிவடைந்தால் வறட்சியை ஏற்படுத்தும். என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக குறைந்த மழை பெறும் பகுதிகளில் எத்தனால் ஆலைகளின் தேவை காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்தால், குடிநீர் மட்டுமின்றி அரிசி போன்ற பிற பயிர்களுக்கான சாகுபடி பரப்பு குறையவோ, இவற்றுக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவோ அபாயங்கள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட கொள்கை, இந்தியாவின் நீர்ப் பாதுகாப்புக்கு புதிய சவாலாக அமையலாம் என என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். நாளையும் தொடரும்..
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு?
கரும்பு சாகுபடி காலம் பொதுவாக 12 மாதங்கள் வரை உள்ளது. சில பகுதிகள் மற்றும் கரும்பு வகைகளைப் பொறுத்து 10 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கலாம் என கூறப்படுகிறது. 12 மாத கரும்புப் பயிரின் சராசரி நீர்த் தேவை ஒரு ஏக்கருக்கு சுமார் 81 லட்சம் லிட்டர் என கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் சராசரி கரும்பு விளைச்சல் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 75 டன் என்ற அளவில் உள்ளது. அதாவது ஒரு ஏக்கருக்கு சுமார் 30 டன் கரும்பு. நல்ல பாசனம் மற்றும் அதிக விளைச்சல் உள்ள பகுதிகளில் இது 40 முதல் 60 டன் வரை செல்லலாம். சராசரியாக 30 டன் என வைத்துக் கொண்டால், அதில் இருந்து 2,100 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம். இதன்படி, சாகுபடியுடன் சேர்த்து ஒரு ஒரு லிட்டர் எத்தனாலுக்கு சுமார் 3,850 லிட்டர் தண்ணீர் செலவாகும் என வேளாண் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
