சென்னை: கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட அறிவிப்பு:
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2022ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்த நலத்திட்ட உதவிகள் பெற கிறித்துவ இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.cwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
