×

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுபவை ரகசிய குடோனில் பதுக்கிய 100 டன் யூரியா மூட்டைகள்: கோவை அருகே பறிமுதல்

மதுக்கரை: கோவை மதுக்கரையை அடுத்த குமுட்டிபதி அருகே கொம்மாண்டாம்பாறை பகுதியில் உள்ள குடோனில் ஆயிரக்கணக்கில் யூரியா உரங்கள் பதுக்கி வைப்பதாக கந்தே கவுண்டன் சாவடி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார், தனியாருக்கு சொந்தமான குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 20 ஆயிரம் மூட்டைகளில் 100 டன் யூரியா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கோவைப்புதூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (50) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை, கேரள மாநிலம், பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த ஆஷிப் கே.அலி குத்தகைக்கு எடுத்து அதில் குடோன் அமைத்திருப்பது தெரிய வந்தது. மேலும், ஒன்றிய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, உரிய ஆவணங்களின்றி கர்நாடகா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து, குடோனில் பதுக்கி, அதனை அங்குள்ள இயந்திரத்தின் மூலம் ஆயில் போல உருக்கி, அதனை டேங்கர் லாரிகள் மூலம் பசை தயாரிக்கும் கம்பெனிக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த 100 டன் யூரியா உர மூட்டைககள், அவற்றை ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக உரமூட்டைகளை ஏற்றி வந்த லாரி டிரைவரான சேலம் எடப்பாடி பகுதியை சேர்ந்த செல்வம் (52) என்பவரை கைது செய்து, உணவு பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் முரளிதரனிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கே.ஜி.சாவடி போலீசார், யூரியா உரங்கள், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டுள்ளதால், உண்மையிலேயே அவை கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதா? அல்லது தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட உரங்களில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kudon ,Cow. ,Madukkara ,Kante County ,Kudon, Kommandampara ,Kumutipati ,Gowai Monastery ,
× RELATED தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்...