×

பாமக தலைவர் என்ற வார்த்தையை நீக்கி நிறுவனர் என லெட்டர்பேடில் திருத்திய ராமதாஸ்: வழக்குகளை வாபஸ் பெற இருதரப்பும் முடிவு

திண்டிவனம்: பாமக தலைவர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பாமக நிறுவனர் என லெட்டர்பேடில் ராமதாஸ் திருத்தம் செய்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சட்டமன்றத் தேர்தலை பாமக இரு அணிகளாக சந்தித்தன. தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி கடுமையாக விமர்சித்த ராமதாஸ் தேர்தலுக்குபின் அமைதியானார்.

இதனிடையே கடந்த வாரம் ராமதாசின் திருமண நாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்திற்கு குடும்பத்துடன் வந்த அன்புமணி பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “பாமகவில் நிலவிய அனைத்து பிரச்னைகளும் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்”என்று தெரிவித்தார். இந்த சந்திப்புக்குபின் ராமதாஸ் பெயரில் எந்தவொரு அறிக்கையும் வெளியாகாமல் இருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் ராமதாஸ், தனது கட்சி நிர்வாகியின் மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவரது பெயருக்கு கீழ் “பாமக நிறுவனர்” என்ற குறிப்பே இடம்பெற்றிருந்தது.

அன்புமணியுடன் மோதல் நீடித்தபோது பாமக நிறுவனர்- தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதை நீக்கம் செய்து ராமதாஸ் கையெழுத்திட்டு அறிக்கை வெளியாகி இருப்பதன்மூலம் தந்தை, மகன் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டது உறுதியாகி இருப்பதாக பாமகவினர் தெரிவிக்கின்றனர். இதன் எதிரொலியாக நீதிமன்றம், தேர்தல் கமிஷனில் போடப்பட்டுள்ள வழக்குகள் இருதரப்பிலும் வாபஸ் பெறப்பட்டு, விரைவில் ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகளின் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என அக்கட்சி வட்டாரத்தில் தகவல் கசிகிறது.

அதேவேளையில் ராமதாசுக்காகவும், அன்புமணிக்காகவும் குரல் கொடுத்து பல்வேறு வழக்குகளை சந்தித்த பாமக நிர்வாகிகள், தொண்டர்களில் பலர் வேதனையில் இருப்பதாகவும், கட்சி தாவும் மன நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Ramadas ,Pamaka ,Dindivanam ,Bamaka ,Anbumani ,Bhamaka ,
× RELATED தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்...