டேராடூன்: அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டுப் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கோயில் அறக்கட்டளையின் கணக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டுப் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டிக்கு சொந்தமான பத்ரிநாத் தாமில் காணிக்கையாகப் பெறப்பட்ட தொகையில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் பரவின. இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில் கமிட்டி இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டியின் தலைவர் ஹேமந்த் திவேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சமூக வலைதளங்களில் பரவி வரும் புகார்களை கோயில் கமிட்டி மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் எனது தனிப்பட்ட செயலாளர் அல்ல; அவர் பிகேடிசி அமைப்பின் சாதாரண அரசு ஊழியர் மட்டுமே. விசாரணையில் இந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இந்த கோயில் கமிட்டியின் முதன்மை செயல் அதிகாரி சோஹன் சிங் ரங்கட் கூறுகையில், ‘விசாரணையைக் குழுவானது அங்கிருக்கும் ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தனது விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும். விசாரணையில் ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி சட்டம் 1939ம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றும் அவர் கூறினார். இந்த விசாரணை முழுமையாக முடிவடையும் வரை, பொதுமக்கள் யாரும் ஆதாரமற்ற அல்லது தவறான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அயோத்தி விவகாரம் சர்ச்சையான நிலையில், தற்போது பத்ரிநாத் கோயில் காணிக்கையிலும் திருட்டு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பத்ரிநாத் மோசடி புகார் வெளிவந்தது எப்படி?
‘பைரவ் சேனா’ என்ற அமைப்பு பத்ரிநாத் தாமில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியது. மேலும், கோயில் குழுத் தலைவர் ஹேமந்த் திவேதியின் தனிப்பட்ட உதவியாளருடன் தொடர்புடைய நிதி முறைகேடு புகார் குறித்தும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று அது வலியுறுத்தியது. இருப்பினும், சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட ஊழியரைத் தனது தனிப்பட்ட செயலாளர் என்று அடையாளப்படுத்திய கூற்றுகளை ஹேமந்த் திவேதி மறுத்தார். அந்த நபர் தனது தனிப்பட்ட செயலாளர் அல்ல, மாறாக அரசு ஊழியர் என்றும், அவர் இதற்கு முன்பு கோயில் குழுவின் மூன்று முன்னாள் தலைவர்களிடம் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி சோகன் சிங் ரங்கட் கூறுகையில், ‘ சமூக ஊடகப் புகார்களைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. கிடைக்கப்பெற்ற காட்சிகளில் போதிய தெளிவு இல்லை. இருப்பினும், பிரச்னையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, முழு விவகாரமும் கோயில் குழுத்தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது’ என்றார்.
