முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவசரம் அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன..? மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவசரம் அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
முதல்வரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது ‘ டேக் டைவர்சன்’ அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?. சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரை கைது செய்வது?. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாக தனது நாற்காலியை தக்க வைத்து- விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதல்வர். ஆணவம் அழிவிற்கு வழி. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: