×

ராமர் கோயில் நன்கொடையில் மெகா மோசடி; அயோத்தி அறக்கட்டளையின் 5 ஆண்டு கணக்கு மறு தணிக்கை: சிறப்பு விசாரணைக்குழு அதிரடி

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை பணத்தில் பல கோடி ஊழல் நடந்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக ேகாயில் ஊழியர்கள் உள்பட 8 பேரை உபி அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவினர் கைது செய்தனர். அவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம், தங்கம் உள்ளிட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை குழுவினர் திங்கட்கிழமை கூடி முடிவு எடுக்க உள்ளது. இதற்கிடையே அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா மற்றும் கோயில் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்துடன் தொடர்புடைய கோபால் ராவ் ஆகியோரிடம் சிறப்பு விசாரணக்குழு விசாரணை நடத்தியுள்ளது.

தற்போது ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கடந்த ஐந்து ஆண்டுகால கணக்குகளை மறு தணிக்கை செய்ய சிறப்பு விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் பெரிய அளவிலான முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த மறு தணிக்கையானது கட்டுமானப் பணிகள் தொடர்பான செலவுகள் மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட நகைகள், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அந்தத் தகவல்கள் கூறின. ஐந்து ஆண்டுகால முழுமையான காலகட்டத்திற்கான அறக்கட்டளையின் நிதி ஆவணங்களை சிறப்பு விசாரணைக்குழுவினர் விரிவாக ஆய்வு செய்யும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அவினாஷ் சுக்லாவை அயோத்தி போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்தினர். நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த சுக்லா ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். அயோத்தி நீதிமன்றம் அவரை 24 மணிநேர போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
இவ்வழக்கில் இதுவரை அதிகபட்ச ரொக்கப் பணம் இவரிடமிருந்தே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் வழங்கிய கருத்து அவமானம், வெட்கக்கேடானது
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் ஆா்எஸ்எஸ் வழங்கிய கருத்து அவமானகரமானது மற்றும் வெட்ககேடானது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ ராமர்கோயில் நன்கொடை மோசடியில் ஆர்எஸ்எஸ் வழங்கிய இந்த நற்சான்றிதழ் அவமானகரமானது மற்றும் வெட்கக்கேடானது. உண்மையில், அதன் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் நபர்களால் பெரிய அளவில் ‘நன்கொடைத் திருட்டு’ நடந்துள்ளது. இது ஒரு மோசடி அமைப்பு’ என்றாா்.

அறக்கட்டளைத் தலைவரை சந்தித்தார் உபி முதல்வர் யோகி
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸைச் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். 89 வயதான தாஸ், சிறுநீர்ப் பாதை தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக ஜூன் 29 அன்று லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அவர் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உஜ்ஜைன் முதல் அயோத்தி வரை திக்விஜய் சிங் பாதயாத்திரை
அயோத்தி ராமர் கோயிலுக்கான நன்கொடைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தைக் கண்டித்து, அக்டோபர் 2 ஆம் தேதி உஜ்ஜைனில் உள்ள மகாகால் கோயிலிலிருந்து அயோத்தி வரை பாதயாத்திரையை மேற்கொள்ளவிருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அறிவித்தார். இது சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கொண்டது. தினமும் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை நடக்க உள்ளதாக அவர் கூறினார்.

ரூ.1400 கோடி நன்கொடை பணத்திற்கு கணக்கு எங்கே?
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ பிரதமர் அவர்களே, பகவான் ராமருக்குத் துரோகம் இழைக்கப்பட்டு, மக்களின் நம்பிக்கை மீறப்பட்டிருக்கும் நிலையில், அதை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம் அல்லது ஆணவம்? உங்கள் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற நன்கொடைத் திருட்டுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் கோபமும் கொந்தளிப்பும் நிலவுகிறது.

நீங்கள் செய்தது ஒரு பெரும் பாவம்; ஆனால் மிக முக்கியமான இந்த விவகாரத்தில் இப்போது நீங்கள் கடைப்பிடிக்கும் மவுனம் அதைவிடப் பெரிய பாவம். ராமர் கோயிலுக்கான முழுப் பெருமையையும் மோடி ஏற்றுக்கொண்டார், ஆனால் இன்று காணிக்கை திருட்டு விவகாரத்தில் அவர் மவுனமாக இருக்கிறார். பெருமையை ஏற்றுக்கொண்ட அவர், பொறுப்பையும் ஏற்க வேண்டும். இது மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம். ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும். அதன் செயல்பாடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரிக்கப்பட வேண்டும். அறக்கட்டளை அமைக்கப்படுவதற்கு முன்பு ராமர் கோயில் கட்டுமானத்திற்காகச் சேகரிக்கப்பட்ட சுமார் ரூ. 1,400 கோடி நன்கொடை குறித்த பொதுக் கணக்கறிக்கை வெளியிடப்பட வேண்டும்’ என்றார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம், ராம பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளது. இதில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை சிறப்புப் புலனாய்வுக் குழு உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,’இந்தச் சம்பவத்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த வேதனையும் கோபமும் அடைந்துள்ளோம். இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி இந்து விரோத மற்றும் தேச விரோத சக்திகள் இந்து தர்மத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த முயல்கின்றன. அனைத்து இந்துக்களும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

Tags : Ram ,Temple ,Ayodhya Trust ,Ayodhya ,Ram Temple ,UP government ,
× RELATED 12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...