×

தெலங்கானாவில் காவலராக பணியில் சேர்ந்தவர் ரூ.200 கோடி சொத்து குவித்த டிஎஸ்பி

திருமலை: தெலங்கானா மாநில காவல்துறையில் சாதாரண காவலராக பணியில் சேர்ந்தவர் சங்கிரெட்டி பீம் ரெட்டி. படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது டிஎஸ்பியாக உள்ளார். இந்நிலையில், டிஎஸ்பி சங்கிரெட்டி பீம் ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் ஐதராபாத், கோல்கொண்டா இப்ராஹிம்பாக்கில் உள்ள பீம் ரெட்டியின் இல்லம் மற்றும் பினாமிகளின் வீடுகள் உட்பட 16 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தப்பட்டது. இதில் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள வில்லாவில் வசிக்கும் பீம் ரெட்டியின் வீட்டில் பெருமளவு சொத்து ஆவணங்கள், 2 கிலோ தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டன.

பெரும்பாலான சொத்துக்களை பினாமி பெயர்களில் வைத்திருந்த பீம் ரெட்டி, ஒவ்வொரு பினாமியின் பெயரையும், சொத்துக்கள் எங்கு அமைந்துள்ளன என்பதையும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் விரிவாக எழுதி வைத்திருந்தார். அதனையும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். அதனடிப்படையில் அதிகாரிகள் பினாமிகளின் வீடுகளில் சோதனை நடத்தி சொத்துக்களின் விவரங்களைக் கண்டறிந்தனர்.

இதில், கர்நாடகாவில் பெங்களூரு புறநகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தையும், அதே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 44 ஏக்கர் விவசாய நிலத்தையும் பீம் ரெட்டி பினாமி பெயர்களில் வாங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் பீம் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது மொத்தம் ரூ.3.6 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி பீம் ரெட்டி கைது செய்யப்பட்டார். பறிமுதல் சொத்துக்களின் மதிப்பு ரூ.200 கோடிஆகும்.

Tags : DSP ,Telangana ,Sangreti Beem Reddy ,State Police ,Sangreti Beam Reddy ,
× RELATED 12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...