லண்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் 2வது அரை இறுதியில் தென் ஆப்ரிக்காவை 40 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து பைனலுக்கு முன்னேறியது. ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச… இங்கிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. கேப்டன் நதாலியே ஸ்கிவர் 75 ரன் (47 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ஹீதர் நைட் 58 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன் மட்டுமே எடுத்து 40 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க வீராங்கனை டஸ்மின் பிரிட்ஸ் 51 ரன் எடுக்க, மற்றவர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் பெல், சார்லி டீன் தலா 2, லின்சி, சோபி, கெம்ப் தலா 1 விக்கெய் வீழ்த்தினர். ஸ்கிவர் ஆட்ட நாயகி விருது பெற்றார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை இரவு 8.00 மணிக்கு தொடங்கும் பைனலில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதுகின்றன.
