தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 ஆகஸ்ட் 4 முதல் போட்டிகள் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் புகழ்பெற்ற டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் 2026 தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

முதல் கட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். இரண்டாம் கட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை இறுதிச் சுற்று உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். டிஎன்பிஎல் 2026 தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (ஜூலை) 3ம் தேதி மதியம் 2.45 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதான வளாகத்தில் உள்ள ஸ்ரீராமன் ஹாலில் நடைபெற உள்ளது.

இந்த 10வது சீசனில் பங்கேற்பதற்காக இதுவரை இல்லாத அளவாக மொத்தம் 783 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இது இந்த தொடரின் பிரமாண்ட வளர்ச்சியையும், இளம் வீரர்களிடையே பெற்றுள்ள பேராதரவையும் காட்டுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 783 வீரர்களில் ஏ-பிரிவு 0 வீரர்கள், பி-பிரிவு 10 வீரர்கள், சி-பிரிவு 6 வீரர்கள், டி-பிரிவு 767 வீரர்கள் என மொத்த வீரர்கள் 783 பேர் இப்பட்டியலில் உள்ளனர். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த 10வது டிஎன்பிஎல் தொடரை மிகவும் சிறப்பான முறையில் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதாக அதன் கவுரவச் செயலாளர் பகவன்தாஸ் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: