டெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஏன் அமைதி காக்கிறார் என்றும், அவர் யாரைக் காப்பாற்ற முயல்கிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி கணைகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிதி முறைகேடு தொடர்பாக இதுவரை 8 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெறும் பகடைக்காய்கள் மட்டுமே. உண்மை குற்றவாளிகள் மற்றும் பின்னணியில் உள்ள பெரிய மனிதர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள் என்றும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில், நடைபெற்றிருக்கும் முறைகேடுகள் குறித்து பிரதமருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்.? அமைதியாக இருப்பதன் மூலம் யாரை காப்பற்ற பார்க்கிறார்? எதற்காக இதை செய்கிறார்? என்று கெஜ்ரிவால் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
ராமர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் அனைவரும் பிரதமரால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அதே போல மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவரும் இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ளார்.இவ்வளவு நெருக்கமான கண்காணிப்பு இருந்தும், அங்கு பெரும் முறைகேடு மற்றும் காணிக்கைத் திருட்டு நடந்தபோது அதைத் தடுக்க பிரதமர் ஏன் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏன் இப்போது மௌனமாக இருக்கிறார்? தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கை ஒரு ஏமாற்று வேலையே என்றும் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.
