பெரம்பலூர், ஜூலை 2: தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவோரை ஆசிரியர்களாக பார்க்கக் கூடாது, மாணவர்களாகத்தான் பார்க்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் அமுதவல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் உப்போடை பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று பெரம்பலூர் மாவட்ட அளவில் வருகிற 4,5 ஆகிய தேதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ள, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் (பொ) செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) (பொ) வேலு முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் அமுதவல்லி கலந்து கொண்டு பேசியதாவது: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (Special TET) டிஆர்பி மூலம் வருகிற 4,5 தேதிகளில் (சனி, ஞாயிற்று கிழமைகளில்) நடத்தப் படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியக்கூடிய இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 3098 பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், உதவி கண்காணிப்பு அலுவலர்கள், துறை அலுவலர்கள் ஆகியோர் தேர்வு நடைபெறும் போது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவோரை ஆசிரியர்களாக பார்க்ககூடாது, மாணவர்களாகத்தான் பார்க்க வேண்டும்.
தேர்வு எழுதுவோர் பணியிலோ, வயதிலோ அனுபவத்திலோ மூத்தவர்கள் என்பதற்காகவோ, தேர்வு மையப் பணிகளில் ஈடுபடுவோர் உதவும் நோக்கிலோ, தேர்வுமைய முறைகேடுகளுக்கு உதவும் வகையிலோ செயலாற்றக் கூடாது. சராசரி மாணவர்கள் தேர்வு எழுதுவதாக நினைத்து தேர்வு மையத்தில் பணிபுரிவோர் பணியாற்ற வேண்டும். வழித்தட அலுவலர், வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர் ஆகியோர் உரிய பாதுகாப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும். தேர்வர்கள் தாமதமின்றி முன்னதாகவே தேர்வுஅறைக்கு வந்து, இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் என 250 பேர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலகஊழியர்கள் கலந்து கொண்டனர்.
