ஒடுகத்தூர், ஜூலை 2: ஒடுகத்தூர் அருகே நில வழிப்பிரச்னையில் முதியவரை அடித்து கொலை செய்த தந்தை, மகனை போலீசார் நேற்று கைது செய்தனர். சம்பவ இடத்தில் எஸ்பி சிவராமன் நேரில் விசாரணை நடத்தினார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(62), விவசாயி. இவரது மகன்கள் செல்வம்(37), சேகர்(35). அதே கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(65), ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகன்கள் சதீஷ்(32), சந்தோஷ்(28). இவர்கள் இரு குடும்பத்திற்கும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு செல்லும் வழி தொடர்பாக 2 குடும்பத்திற்கும் பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. மேலும் நிலத்திற்கு செல்லும் வழி தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் வெங்கடேசனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே நிலத்திற்கு செல்லும் வழி தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, வெங்கடேசனுக்கு ஆதரவாக அவரது மகன் சேகரும், செல்வகுமாருக்கு ஆதரவாக அவரது மகன் சந்தோசும் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்வகுமார் மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேகரின் தலையில் வெட்டியுள்ளனர். அப்போது இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் அவர்கள் இருவரையும் தடுக்க முயன்றார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த செல்வகுமாரும், சந்தோசும் சேர்ந்து வெங்கடேசனை கைகள் மற்றும் கட்டையால் சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த வெங்கடேசன் அங்ேகயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைபார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், தலையில் வெட்டு காயங்களுடன் வந்த சேகருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, செல்வகுமார் மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் காவல் நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவுவதை தவிர்க்க இருவரையும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தகவலறிந்த எஸ்பி சிவராமன், டிஎஸ்பி நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, முத்துச்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ நடந்த இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஎஸ்பி காலில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்
முதியவர் கொலை தொடர்பாக எஸ்பி சிவராமன், டிஎஸ்பி நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து எஸ்பி அங்கிருந்து சென்றவுடன் திடீரென கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் டிஎஸ்பி நந்தகுமாரின் காலில் விழுந்து கதறி அழுதனர். இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
