தவெக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் எந்த முடிவும் எடுக்காததால் தலைவர்கள் ஏமாற்றம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை: தவெக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று கோவளத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காததால் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் புறக்கணித்தன. இது தவெகவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் மாணிக்தாகூர், அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விசிக சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் எம்பி, அமைச்சர் வன்னி அரசு, பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ஜோதிமணி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், நவாஸ்கான் எம்.பி. ஆகியோரும் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ், நிர்மல்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில் தனி அறை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் முதல்வர் விஜய் ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் அரங்கத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசினர்.

இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு விரைவில் பெயர் வைக்க வேண்டும் என்றும், கூட்டணியை வழிநடத்த முக்கிய தலைவர்கள் அடங்கிய வழிகாட்டும் குழு ஒன்று அமைப்பது என்றும், இந்த கூட்டணிக்கென குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்று உருவாக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இந்தக் கூட்டத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை. இதனால், கடும் விரக்தியடைந்த தலைவர்கள், கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்காமல், முதல் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவித்தனர்.

இந்த கூட்டத்தில், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தவெகவுக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும், 5 ஆண்டுகள் ஆட்சி தொடர உதவ வேண்டும் என்றும் விஜய் பேசியதாக தெரிகிறது. 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டம் முடிந்ததும் முதல்வர் விஜய் புறப்பட்டு சென்றார். பின்னர் இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறிது நேரம் பேசினர். இதையடுத்து திருமாவளவன், மாணிக் தாகூர், வைகோ, ஆதவ் அர்ஜுனா, காதர் மொய்தீன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேட்டியளித்தனர். இந்த பேட்டியின்போது, இந்தியா கூட்டணியில் த.வெ.க. சேருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மாணிக்தாகூர் தற்போதைய நிலையில் தவெகவுக்கு எம்.பி.க்கள் இல்லை. அதனால் எம்.பி.க்கள் கிடைத்த உடன் கூட்டணியில் சேர்ப்பது கூறித்து பரிசீலிப்போம் என்றார். இந்த பதிலால் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்குமார் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பேச்சை மாற்றிய மாணிக் தாகூர், ‘‘தான் இந்த கூட்டத்தின் செய்தி தொடர்பாளர் மட்டும்தான், முக்கிய முடிவுகளை நான் அறிவிக்க முடியாது’’ என்று கூறி சமாளித்தார். விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க மார்க்சிய கட்சியின் 2 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்ததால்தான் விஜய் முதல்வராக பதவியேற்க முடிந்தது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று நிராகரித்து விட்டனர்.

இந்த நிலையில், தவெக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் கூட்டத்தில் மார்க்சிய மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுபற்றி கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘விஜய் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவை விட்டு விலகி, அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெக கட்சியில் சேர்ப்பதில் தான் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

அதன்படி, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று, தவெக அரசுக்கு தேவையான மெஜாரிட்டி எண்ணிக்கையான 118 எம்எல்ஏக்களுடன் ஆட்சியை தக்க வைக்க மறைமுக வேலைகளில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தவெகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்ததும், தற்போது விஜய் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளை அமைச்சர் பதவியில் இருந்தும் கழற்றிவிட ஒரு ரகசிய திட்டம் அவர்களிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற அதிருப்தி காரணமாகவே விஜய் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றனர்.

* போலீசாருடன் வாக்குவாதம்
கூட்டம் நடைபெற்ற கோவளம் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முதல்வர் விஜய் போன பிறகு செய்தியாளர்கள் சிலர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மற்ற செய்தியாளர்கள் ஒன்று திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: