அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசு செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுடன் கொள்கை சீர்திருத்தம் மற்றும் தொழில் எளிமைப்படுத்துதல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் செஷல்ஸ் நாட்டுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணிக்கு அனைத்து ஒன்றிய அமைச்சகங்களின் செயலாளர்களுடன் இரண்டாவது முறையாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இரண்டு மாதங்களுக்குள் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நடத்தும் இரண்டாவது முக்கிய சந்திப்பாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில், நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவது, புதிய கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் நிர்வாகத்தை எளிமைப்படுத்துவது ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த மே 21ம் தேதி வளர்ந்த இந்தியா திட்டத்தை நனவாக்குவதற்கான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை உருவாக்க ஒன்றிய அமைச்சரவை மற்றும் ஒன்றிய செயலாளர்களின் கூட்டுக்கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார். அப்போது அதிகாரிகளிடம் உரையாற்றிய பிரதமர், கோப்புகள் தேக்கமடையாமல் விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தித்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மோசமாக செயல்பட்ட அமைச்சகங்களுக்கு தங்களை மேம்படுத்திக் கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது ஒன்றிய அமைச்சரவையில் பிரதமரைத் தவிர்த்து 30 அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் உள்ளனர். விரைவில் ஒன்றிய அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பிரதமரின் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories: