ஊத்துக்கோட்டை: ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சிங்கப்பெருமாள்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமம் அடைய வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னையின் புறநகர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் கூடி வருகிறது.
எனவே அந்த நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 2022ம் ஆண்டு சென்னை எல்லை சாலைத்திட்டம் என்ற பெயரில் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரையில் ரூ.12,301 கோடி திட்ட மதிப்பீட்டில் 133 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியனது பிரிவு ஒன்றின்படி எண்ணூர் முதல் தச்சூர் வரை 25 கிலோ மீட்டர் தொலைவிலும், பிரிவு இரண்டின் படி தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை 13 கிலோ மீட்டர் வரையிலான பணிகள் மதுரவாசல், கன்னிகைப்பேர் பகுதிகளில் நடந்து வருகிறது. இதுபோல் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இப்பணியானது நடைபெற்று வருகிறது.
இச்சாலை அமையும் வழித்தடங்களில் 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆனால், தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை உள்ள 13 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை அமைக்க மண் இல்லாததால் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஒரு சில இடங்களில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2025க்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கடந்த ஆண்டு ஆய்வு செய்த துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
