பெரம்பலூர், ஜூன் 30: தேர்தல் வாக்குறுதியின்படி தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவளக்குறிச்சி பகுதி இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆலத்தூர் தாலுகா, பாடலூர் ஊராட்சி, திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் அப்பகுதியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் என்பவர் தலைமையில் திரண்டு வந்து கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். தமிழக முதல்வர் விஜய் தேர்தலுக்கு முன்பாக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வேளாண் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார்.
வெற்றி பெற்ற பிறகு தமிழக முதல்வர் உடனடியாக விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதை தடுத்திட தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் தீர்மானமாக சட்டசபையில் ஒன்று சேர்ந்து அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மக்கள் 8 கோடி பேர் காவிரி நீரை மட்டுமே குடிநீருக்காக நம்பி இருக்கிறார்கள். ஐந்தரைகோடி பேர் டெல்டா பாசன விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். காவிரி அய்யாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரூ. 10 ஆயிரம் கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. பெரம்பலூர் மாவட்டம் கடும் வறட்சியான பகுதியாக இருப்பதால் நீர்ப்பாசன திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
