பெரம்பலூர், ஜூன் 29: பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் 133 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்வள ஆதார துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் சாதாரண மழை பெய்தால் கூட ஏரி நிரம்பி விடும். செங்குணம் ஏரி நிரம்பி இருந்தால் செங்குணம், சிறுகுடல், பாலம்பாடி, அருமடல், பீல்வாடி உள்ளிட்ட பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் தானாகவே உயர்ந்து விடும். செங்குணம் கிராம விவசாயிகள் முந்தைய காலத்தில் நெல், கருணை, மஞ்சள், வெங்காயம் போன்றவற்றை அதிக அளவில் சாகுபடி செய்து வந்தனர். ஏரிப்பாசனத்தின் மூலம் நன்செய் நிலத்தில் குறிப்பாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் மூன்று போகமும் நெல் சாகுபடி செய்தும், புன்செய் நிலத்தில் ஒரு போகம் நெல் சாகுபடி செய்தும் பயனடைந்தனர்.
செங்குணம் கிராமத்தில் விளையும் கருணை கிழங்கிற்கு மதுரை மார்க்கெட்டிலும், இங்கு விளையும் மஞ்சளுக்கு சேலம் மார்க்கெட்டிலும் நல்ல மவுசு இருந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழையின் போது மட்டும் ஏரிக்கு சிறிதளவே தண்ணீர் வரத்து உள்ளது. செங்குணம் ஏரிக்கு தண்ணீர் வரும் பல வரத்து வாய்க்கால் பகுதிகளில் பெரும்பாலும் தூர்ந்து போன நிலையில் இனி வாய்க்காலை தேடுமளவிற்கு காணாமல் போய்கொண்டிருக்கிறது. இதேபோல் முருகன் மலைக்கு வடக்கு பகுதியில் திரளும் தண்ணீர் ஏரிக்கு வராமல் குவாரி பள்ளத்திற்கு சென்று விடுகிறது. இந்நிலையில் ஏரிக்குத் தண்ணீர் வரத்து இல்லாததால் மழைபெய்யும் காலங்களில் ஏரியில் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பாததால் மூன்று போகம் நெல் சாகுபடி செய்த நன்செய் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் முதல் போகம் சாகுபடி செய்வதற்கே சிரமப்படுகின்றனர்.
நன்செய் நிலங்களில் கூட தற்போது விவசாயிகள் முத்துச்சோளம், பருத்தி போன்ற மானாவாரி பயிர்களையே சாகுபடி செய்து வருகின்றனர். ஓரிரு ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில் ஏரி முற்றிலும் வற்றிய நிலையில் உள்ளது. தற்போது கடந்த சில ஆண்டுகளாக செங்குணம் ஏரியில் சீம கருவேலி மரங்கள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடக்கிறது. எனவே ஏரியில் வளர்ந்து வரும் சீம கருவேலி முட்களை அடியோடு பிடுங்கி எரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் குமார் அய்யாவு தெரிவித்ததாவது: பருவ மழைக்கு முன், நீராதாரத்திற்கு வேட்டு வைக்கும் சீம கருவேல மரங்களை அகற்றி, ஏரிக்கு நீர் வரத்து அதிகம் உள்ள வாய்க்கால்களை சீரமைத்துத்தர வேண்டும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
