×

ஆண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பெண்ணியம் குறித்து பாடகிகள் சுனிதா – சின்மயி மோதல்: சமூக வலைதளங்களில் பெரும் விவாதம்

ஐதராபாத்: பெண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்து தெலுங்கு பாடகி சுனிதா பேசியது பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. பிரபல தெலுங்கு பின்னணி பாடகி சுனிதா உபத்ரஷ்டா (46) சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பெண்ணியம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அளித்த பேட்டியில், ‘எனது உடல் எனது உரிமை என்று பெண்கள் கூறினால், அதனை பார்க்கும் ஆண்களின் கண்களும் அவர்களது உரிமைதான்; சிகரெட் பிடிப்பதை சுதந்திரத்தின் அடையாளமாக கருதுவது முட்டாள்தனம். அவரவர் விருப்பப்படி ஆடை அணிவது மட்டுமே பெண்ணியம் அல்ல’ என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சுனிதாவின் இந்த பேச்சு, பெண்களின் உடல் ரீதியான சுதந்திரத்தை தவறாக சித்தரிப்பதாக கூறி, அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன. சுனிதாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாடகி சின்மயி, ‘ஆண்களின் பார்வையை உரிமை என்று கூறுவது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும்; பெண்களின் சுதந்திரம் குறித்து பேசும் போது ஆண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது ஆபத்தானது.

இது பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை நியாயப்படுத்தும் செயலாகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள பாடகி சுனிதா, ‘பெண்களை தவறான நோக்கத்தில் பார்க்கும் சில ஆண்கள் மீதான கோபத்தில்தான் அவ்வாறு பேசினேன்; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை; சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான சுரண்டல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ளப் போவதில்லை. எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Sunita-Chinmai ,Hyderabad ,Sunita ,Sunita Ubatrashta ,
× RELATED மத்திய பிரதேச ஆன்மீக நிகழ்ச்சியில்...