×

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய நிலையில் ‘டேட்டிங்’ செயலியில் நடிகையின் கணவர் பெயர் வைரல்: சமூக வலைதளங்களில் கசிந்ததால் பரபரப்பு

மும்பை: நடிகை ரகுல் பிரீத் சிங்கின் கணவர் ஜக்கி பக்னானியின் பெயர் டேட்டிங் செயலியில் இடம்பெற்றுள்ள தகவல் பாலிவுட்டில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜக்கி பக்னானி (39), நடிகை ரகுல் பிரீத் சிங்கை (33) கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவாவில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஜக்கி பக்னானி அளித்த ஒரு நேர்காணலில், தங்கள் உறவை ‘சிச்சுவேஷன்ஷிப்’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது.

இது குறித்து ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஒரு மணிநேர உரையாடலில் இருந்து ஒரு வரியை மட்டும் எடுத்து தலைப்பாக்குவது வருத்தமளிக்கிறது, எங்களது பேச்சை அதன் சூழலுடன் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று விளக்கம் அளித்திருந்தார். கொரோனா காலத்தில் காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி, கடந்த ஆண்டு தான் தங்களது மணவாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில், பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் மட்டுமே பயன்படுத்தும் ‘ராயா’ என்ற டேட்டிங் செயலியில் ஜக்கி பக்னானியின் புகைப்படம் இருப்பதாகக் கூறி ஒரு ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த செயலியில் ஜக்கி பக்னானி ‘நடிகர் மற்றும் தயாரிப்பாளர்’ என்று குறிப்பிட்டுள்ளதோடு, அவரது இருப்பிடம் லண்டன் என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இது ஜக்கி பக்னானியின் உண்மையான கணக்கா அல்லது அவரது பெயரில் யாராவது உருவாக்கிய போலி கணக்கா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே தனது திருமண உறவு குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது டேட்டிங் செயலி விவகாரமும் சேர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Tags : RAKUL PREET SINGH ,JACKIE BAGNANI ,Bollywood ,Raghul Preet Singh ,
× RELATED ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய நிலையில்...