×

கர்நாடகாவில் நடந்த விழாவில் மோதல்; காங்கிரஸ் எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு: மதசார்பற்ற ஜனதா தளம் மீது குற்றச்சாட்டு

சிக்கபள்ளாப்பூர்: கர்நாடகாவில் நடந்த அரசு விழாவின் போது காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் நாடாபிரபு கெம்பேகவுடா ஜெயந்தி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். அப்போது திடீரென சிக்கபள்ளாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் மீது, அங்கிருந்த மர்ம நபர்கள் திடீரென செருப்பை வீசி தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக அந்த செருப்பு அவர் மீது படாமல் இலக்கை தவறவிட்டது.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் எதிர்க்கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், ‘ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயற்கை; ஆனால் வன்முறை மற்றும் அவமதிப்பு மூலம் எதிர்ப்பை ஒடுக்க நினைக்கும் இத்தகைய கோழைத்தனமான செயல்களுக்கு கர்நாடகாவில் இடமில்லை. உண்மை மற்றும் மக்களுக்காக ஒலிக்கும் குரலை யாராலும் ஒடுக்க முடியாது’ என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : KARNATAKA ,SANDAL ,CONGRESS MLA ,JANATA ,Chikdalapur ,Congress ,MLA ,Pradeep Eeswar ,Naadaprabhu Kembegawuda Jayanti festival ,Chikkdalapur, Karnataka ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சாமி தரிசனம்