ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக வரைவை உருவாக்குவதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. சட்டீஸ்கரில் ஏப்ரல் 15ம் தேதி மாநிலத்திற்கான பொது சிவில் சட்ட வரைவை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைப்பதற்கு சட்டீஸ்கர் அமைச்சரவை முடிவு செய்திருந்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை பாஜ தலைமையிலான அரசு நேற்று முன்தினம் அமைத்தது.
இது குறித்து முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில்,”பொது சிவில் சட்டத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதை அமல்படுத்துவதற்கும் மாநில அரசு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமை தாங்குவார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சத்ருகன் சிங் மற்றும் எம்கே ரவுட் மூத்த வழக்கறிஞர் மோகன் பவார் மற்றும் மாஜி முதல்வர் ஜோதி ராணி சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
