விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்

பகுதி -5

இந்த உலகத்தில் படைப்பு பற்றிய அற்புதமான தகவல்கள் விஷ்ணு புராணத்தில் இருக்கின்றன. இந்த உலகம் தானே தோன்றியதா?அல்லது படைக்கப்பட்டதா என்கிற கேள்வி முதல் கேள்வியாக எழுகிறது. காரணமின்றி காரியமில்லை என்ற வாதத்தின் படி, காரியமாகிய இந்த உலகத்துக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.

ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதை உருவாக்கியவன் ஒருவன் இருக்க வேண்டும்.அப்படி உருவாக்கியவரை பிரம்மன் என்கிறோம். அந்த பிரம்மனை உரு வாக்கிய ஆதி தேவனைஸ்ரீ மன் நாராயணன் என்று விஷ்ணு புராணம் சொல்லுகிறது.

உலகமும் உயிர்களும் எந்த வரிசையில் படைக்கப்பட்டன?

படைப்புத் தொழிலை செய்த நான்முகனாகிய பிரம்மதேவன், தேவர்களையும், மனிதர்களையும், பித்ரு கணங்கள், ராட்சச கணங்கள், பிராணிகள், தாவர இனங்கள் மற்றும் ஆகாயம் நீர் இவற்றில் வசிக்கும் உயிரினங்கள், என இத்தனை விஷயங்களையும் எப்படிப் படைத்தார்? இவைகளின் குண விசேஷங்கள் என்ன? பண்புகள் என்ன? உருவங்கள் என்ன என்று அடுக்கடுக்காக கேட்கும் கேள்விகளுக்கு பராசரர் விடை யளிப்பது பரிணாமம் பற்றிய அற்புதமான விஷயம்.

விஷ்ணு புராணத்தில் பராசர மகரிஷி மைத்ரேயருக்கு அளிக்கும் இந்த விளக்கங்கள், ஆன்மீகக் கண்ணோட்டம் மட்டுமல்லாமல், நவீன அறிவியல் வியக்கும் ஒரு பிரபஞ்சப் பரிணாமக் கொள்கையை (Cosmic Evolution) மிக நுட்பமாக விவரிக்கின்றன.காரணமின்றி காரியமில்லை (சத்கார்ய வாதம்) என்ற தத்துவத்தின் அடிப்படையில், இந்த பிரம்மாண்டமான படைப்புக்கு ஒரு மூலக் காரணம் இருக்க வேண்டும் என்பதை விஷ்ணு புராணம் மிக அழகாக நிறுவுகிறது.

படைப்புக்கு முன்னால் இந்த உலகம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, அது ‘‘பிரகிருதி” (வடிவமற்ற மூலப்பொருள்) என்ற நிலையில் ஒடுங்கி யிருந்தது என்கிறார் பராசரர்.ஸ்ரீ மன் நாராயணனின் சங்கல்பத்தால், காலம் (Time) என்ற காரணி தூண்டப்பட்டு, குணங்களின் சமநிலை மாறும்போது படைப்பு தொடங்குகிறது.முதலில் மகத் தத்துவம் (பேரறிவு), பின் அகங்காரம் (தனித்துவ உணர்வு), அதிலிருந்து பஞ்சபூதங்களும் (ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம்), புலன்களும் தோன்றுகின்றன. இவை அனைத்தும் இணைந்து ஒரு பிரம்மாண்டமான முட்டையாக (பிரஹ்மாண்டம்) மாறுகிறது.

இதனுள் அந்த ஆதிதேவன் பிரம்மனாக வடிவெடுத்து படைப்புத் தொழிலைத் தொடங்குகிறான்.பிரம்மன் படைப்பைத் தொடங்கும்போது, அது எடுத்தவுடனே முழுமையான மனிதர்களாகவோ தேவர்களாகவோ மாறவில்லை. அது ஒன்பது படிநிலைகளாக, மிகத் தெளிவான ஒரு வரிசையில் பரிணமிக்கிறது.

பிராகிருத படைப்புகள், வைகிருத படைப்புகள்

இந்த படிப்புகளை .பிராகிருத படைப்புகள் (இயற்கையான மூலப் படைப்புகள்) என்றும் வைகிருத படைப்புகள் (வடிவ மாற்றப் படைப்புகள் ) என்றும் பிரிக்கலாம்.

* மஹத் சர்க்கம்: பேரறிவின் தோற்றம்.

* தன்மாத்திர சர்க்கம்: ஐம்பூதங்களின் நுட்பமான தன்மைகள் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) தோன்றுதல்.

* வைகாரிக சர்க்கம்: புலன்களும், மனமும் தோன்றுதல்.

இந்த மூன்றும் இயற்கையான மூலப் படைப்புகள்

இதற்கு பிறகு ஸ்தாவரம்,திர்யக்குகள், ஊர்த்வ ஸ்ரோதஸ், அர்வாக் ஸ்ரோதஸ், அனுக்ரஹ சர்க்கம் ஆகிய ஐந்து படி நிலைகள் இருக்கின்றன.இதில் முதலாவது ஸ்தாவர சர்க்கம். இதுவே முதல் உயிர்நிலை. நகரும் தன்மையற்ற, அறிவு உள்ளுக்குள் ஒடுங்கியிருக்கிற, உணர்வு மட்டும் கொண்ட தாவரங்கள், மரங்கள், கொடிகள். (அறிவியல் கூறும் ஓரறிவு உயிரினங்கள்). மணிவாசகர் “புல்லாகி பூடாகி” என்று சிவபுராணத்தில் தொடங்குகிறார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.

இரண்டாவது விலங்கினங்கள்.திர்யக்குகள் என்பார்கள். கிடைமட்டமாக உணவு உட்கொள்ளும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள். இவை அறியாமை மிக்கவை. பெரும்பாலும் உணர்வு மற்றும் பசியால் மட்டுமே இயக்கப்படுபவை. இதற்குப் பிறகு மேல் உலக தேவர்கள்.சத்துவ குணமும் நற்பண்புகளும் கொண்ட தேவர்கள்.

அடுத்து கீழ்நோக்கி உணவு உட்கொள்ளும் மனிதப் பிறவி. மனிதர்களின் விசேஷம் என்னவென்றால், அவர்களிடம் ரஜோ குணமும் (செயல் வேகம்) தமோ குணமும் (அறியாமை) கலந்து இருக்கும். துக்கமும் இன்பமும் கலந்த வாழ்வு இவர்களுடையது. இதற்கடுத்து குணம் மற்றும் மனதின் அடிப்படையில் ஏற்படும் விசேஷப் படைப்புகள் (பந்துக்கள், பித்ருக்கள் போன்ற மறைமுக சக்திகள்).நிறைவாக சனகாதி முனிவர்கள் மற்றும் நவகிரகங்கள், பிரஜாபதிகள் போன்ற படைப்பின் தூண்கள்.

படைப்பில் இந்த வேறுபாடு ஏன்?

மைத்ரேயர் கேட்ட, “பண்புகள் மற்றும் குண விசேஷங்கள்” என்ன என்ற கேள்விக்கு பராசரர் விசித்திரமான ஒரு விளக்கத்தைத் தருகிறார். பிரம்மன் படைப்பில் ஈடுபடும்போது, அவருடைய வெவ்வேறு மனநிலைகளில் இருந்து வெவ்வேறு கணங்கள் தோன்றின.

* தேவர்கள் (சத்துவ குணம்): பிரம்மன் தன் உடலை மாற்றி, முகத்திலிருந்து ஒளி மற்றும் தூய்மையின் வடிவமாக தேவர்களைப் படைத்தார்.

* பித்ருக்கள்: பிரம்மனின் பக்கவாட்டிலிருந்து (விலாப்பகுதி) பித்ரு கணங்கள் தோன்றின.

* மனிதர்கள் (ரஜோ குணம்): பிரம்மனின் தீவிரமான ஆசை மற்றும் செயல்பாட்டு மனநிலையிலிருந்து மனிதர்கள் தோன்றினர். அதனால்தான் மனிதர்களுக்கு ஆசையும், உழைப்பும், தேடலும் இயல்பாகவே அதிகம்.

* அசுரர்கள் (தமோ குணம்): பிரம்மனின் தொடையிலிருந்து இருள் மற்றும் அறியாமையின் வடிவமாக முதலில் தோன்றினர்.

விஷ்ணு புராணம் காட்டும் இந்த பரிணாம வரிசை, வெறும் சடப்பொருள் (Matter) எவ்வாறு படிப்படியாக உணர்வாக (Consciousness) மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.

தாவரங்களின் ஒடுங்கிய உணர்வில் தொடங்கி, விலங்குகளின் பசி-பய உணர்வாக மாறி, மனிதனின் பகுத்தறிவாக உயர்ந்து, தேவர்களின் ஆன்மீக ஒளியாகப் பரிணமிக்கும் விந்தையை பராசரர் அடுக்கடுக்காக விளக்குகிறார். தர்மன், அதர்மன் – பராசர மகரிஷி வம்சாவளிகளை வெறும் பெயர்களாகச் சொல்லாமல், மனித மனதின் இயல்புகளைப் பிரதிபலிக்கும் குறியீடுகளாகவே கையாண்டுள்ளார்.

மனிதன் தோன்றிய கணத்திலேயே அவனுக்குள் அறமும் (தர்மம்) மறமும் (அதர்மம்) சேர்ந்தே பிறந்து விடுகின்றன. இதை விஷ்ணு புராணம் விவரிக்கும் விதம் மிக அற்புதமானது. எப்பொழுது இந்த உலகம் படைக்கப்பட்டதோ, அதில் எப்பொழுது மனிதன் படைக்கப்பட்டானோ, அப்பொழுதே, நன்மையும் தீமையும் கலந்து இருப்பதை அறிகிறோம்.இதைக் குறியீடுபோல பராசரர் சொல்லுகின்றார் மநுவின் வம்சத்தை (மனிதர்களின் வம்சம்) சொல்லுகின்ற பொழுது தர்மன் என்று ஒருவனைச் சொல்லி அவனுடைய மனைவியின் வழியாக எத்தனை நன்மக்கள் பிறந்தார்கள் என்பதைக் குறியீடுகளாகச் சொல்லுகின்றார்.

அதைப்போல அதர்மன் என்று ஒருவனைச் சொல்லி, அவன் அடியாக வியாதி போன்ற மக்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதைக் குறியீடாகச் சொல்லுகிறார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி, நன்மையின் அடிப்படையில் பிறப்பதெல்லாம் நன்மையாகவும் தீமையின் அடிப்படையில் பிறப்பதெல்லாம் தீமையாகவும் இருக்கும்.இதை இன்னும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

தர்மனின் வம்சம்:

நன்மையின் வெளிப்பாடு

பிரம்மனின் மார்பிலிருந்து தோன்றிய தர்மன் (அறம்), தக்ஷ பிரஜாபதியின் மகள் களான பதிமூன்று பேரை மணக்கிறான். அவர்களின் பெயர்களும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் பெயர்களும் மனித குலத்திற்குத் தேவையான நற்பண்புகளின் குறியீடுகள்:

* ஸ்ரத்தா (நம்பிக்கை) பெற்றெடுத்த மகன் காமன் (இங்கு காமன் என்பது நல்ல லட்சியங் களின் மீதான ஆசை).
* லக்ஷ்மி (செல்வம்/அழகு) பெற்றெடுத்த மகன் தர்பன் (மகிழ்ச்சி/பெருமிதம்).
* த்ருதி (பொறுமை) பெற்றெடுத்த மகன் நியமம் (ஒழுக்கம்).
* துஷ்டி (மனநிறைவு) பெற்றெடுத்த மகன் சந்தோஷம்.
* மேதா (அறிவுக்கூர்மை) பெற்றெடுத்த மகன் சுருதம் (கல்வி ஞானம்).
* க்ரியா (செயல்பாடு) பெற்றெடுத்த மகன்கள் தண்டம், நயம், வினயம் (நீதி, நேர்மை, அடக்கம்).

இதன் செய்தி: மனிதன் எப்போது நம்பிக்கை, பொறுமை, மனநிறைவு, நற்செயல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கிறானோ, அப்போது அவனுக்குள் நல்ல எண்ணங்களும், மகிழ்ச்சியும், ஒழுக்கமும் இயல்பாகவே பிறக்கும். நன்மையின் விதை நன்மையையே அறுவடை செய்யும்.

அதர்மனின் வம்சம்: தீமையின் தொடர்வினைமறுபுறம், அதர்மத்தின் வம்சாவளியை பராசரர் விவரிக்கும் போது, தீமை எவ்வாறு சங்கிலித் தொடராகப் பெருகுகிறது என்பதைக் காட்டுகிறார். அதர்மனின் மனைவி ஹிம்சை (வங்கிஷை/கொடுமை).

அதர்மனுக்கும் ஹிம்சைக்கும் பிறந்தவர்கள்:

* அன்ருதம் (பொய்), நிக்ருதி (சூது/ ஏமாற்றுதல்).
* பொய்யும் சூதும் இணையும் போது பிறப்பவர்கள்: பயம் (அச்சம்), நரகம் (துன்பம்). இவர்களோடு மாயை (வஞ்சகம்), வேதனை (வலி) ஆகியோரும் பிறக்கிறார்கள்.
* மாயைக்கும் பயத்திற்கும் பிறப்பது: மிருத்யு (மரணம்/அழிவு).
* வேதனைக்கும் நரகத்திற்கும் பிறப்பவர்கள்: துக்கம் (மனக்கவலை), வியாதி (நோய்), ஜரை (முதுமை/தளர்ச்சி), க்ரோதம் (கோபம்), லோபம் (பேராசை).

பராசரர் காட்டும் இந்த வம்சம் ஒரு மாபெரும் உளவியல் உண்மை. மனிதன் எப்போது அதர்மத்தையும் வன்முறையையும் (ஹிம்சை) கையில் எடுக்கிறானோ, அங்கு பொய்யும் ஏமாற்று வேலைகளும் பிறக்கின்றன. அதன் விளைவாக பயமும், மனவேதனையும், நோய்களும், இறுதியில் அழிவும் (மிருத்யு) தேடி வருகின்றன.விஷ்ணு புராணம் காட்டும் இக்குறியீட்டின்படி, நன்மையும் தீமையும் வெளியில் எங்கோ இல்லை; அவை அவனுடைய எண்ண ஓட்டங்களாக அவனுக்குள்ளேயே இருக்கின்றன.

நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். தர்மத்தை விதைத்தால் சந்தோஷமும், அதர்மத்தை விதைத்தால் வியாதியும் துக்கமும்தான் மிஞ்சும். படைப்பின் தொடக்கத்திலேயே இந்த இரண்டு பாதைகளும் மனிதனுக்குக் காட்டப்பட்டுவிட்டன. எதைத் தேர்ந்தெடுப்பது என்பது மனிதனின் கைகளில்தான் உள்ளது. இதற்குப்பிறகு பராசர மகரிஷி, மகாலட்சுமியின் தோற்றத்தைப் பற்றி சொல்லுகின்றார்.

ஒரு இடத்தில் மகாலட்சுமி பிருகு முனிவருக்கு மகளாகப் பிறந்து மகாவிஷ்ணுவை மணந்து கொண்டாள் என்று சொல்லுகின்றார். தல புராணங்களிலே மகாலட்சுமியின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு விதமான கதைகள் இருக்கின்றன. அவள் தாமரைப் பூவிலே இருந்து தோன்றினாள். இன்னொரு இடத்தில், அவள் மேதாவி முனிவருக்கு மகளாகத் தோன்றினாள். இன்னொரு இடத்திலே பாற்கடலை கடைந்தபோது பாற்கடலில் இருந்து தோன்றினாள்.இத்தனை மகாலட்சுமி இருக்க முடியுமா? பிறகு ஏன் மகாலட்சுமி குறித்து இத்தனைக் கதைகள் என்பதற்கு மிக அற்புதமான விளக்கத்தை வழங்குகின்றார். அடுத்து பார்ப்போம்.

(தொடரும்)

முனைவர்ஸ்ரீ ராம்

 

Related Stories: