சென்னை: கடந்த 2006-11ல் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் சொத்து சேர்த்ததாக 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017ல் விடுவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துரைமுருகன், அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கடந்த 2024ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை வேலூருக்கு மாற்ற மறுத்ததை எதிர்த்து துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, துரைமுருகன் தரப்பில், வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், இந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய் தார்.
