சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த மோசடியில் வி.சுப்ரமணியன், அவரது கூட்டாளியான சுரேஷ் பால் மெஸ்ஸர்ஸ் டேட்டாடெக் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்களான ஷேக் தாவூத் நாசர் மற்றும் ரகுபதியின் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்ட 2017ம் ஆண்டு தேர்வு முறைகேடு செய்ய சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
முகவர்கள், இடைத்தரகர்கள் மூலம் விருப்பமுள்ள தேர்வர்களை குறிவைத்து ரூ.14 லட்சம் முதல் 16 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது. அந்த பணத்தை இடைத்தரகர்கள் வங்கி கணக்குகள் மற்றும் பினாமி நிறுவனங்களான டிரஸ்ட் எண்டர்பிரைசஸ், விஸ்டம் எண்டர்பிரைசஸ், சூரியன் எண்டர்பிரைசஸ் மூலமாக கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகள் வழியாக அனுப்பப்பட்டு பின்னர் அசையா சொத்துகள் மற்றும் நகைகளாக மற்றப்பட்டது தெரியவந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை என 21 இடங்களில் நடந்த சோதனையில், முகவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களால் வசூலிக்கப்பட்ட பணத்தின் பதிவுகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், முகவர்களிடம் வைப்பட்டிருந்த பல அரசு தேர்வுகள் தொடர்பான ஓஎம்ஆர் தாட்களின் கார்பன் நகல், தேர்வர்களுக்கு சொந்தமான பல சான்றிதழ்களின் நகல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டக்கூடிய பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த சோதனையில் ரூ.13.18 லட்சம் ரொக்கம், 56 வங்கி கணக்குகள் மற்றும் 2 டிமேட் கணக்குகள் முடக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் பெயர்களில் உள்ள ரூ.9.67 கோடி மதிப்புள்ள (சந்தை மதிப்பு ரூ.20 கோடி) மேல் உள்ள 36 அசையா சொத்துகளின் விவரங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
