×

குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை விவசாயிகள் ஜூலை 31ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்: அமைச்சர் வினோத் வேண்டுகோள்

சென்னை: வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வெளியிட்ட அறிக்கை: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், குறுவை பருவத்தில் மாநிலத்தின் 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கார், குறுவை, சொர்ணவாரி நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அனைத்து குறுவை பருவ பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுமார் 6 இலட்சம் ஏக்கரில் குறுவை “நெற்பயிர்” பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட்,

கத்தரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய 12 தோட்டக் கலைப் பயிர்களும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை நேற்று முதல் விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை நெற்பயிருக்கு ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வரும் 15ம் தேதி ஆகும்.

இதர அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் ஜூலை 31ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு, நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு, நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னர்” வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி ஜூலை 31ம் தேதி எனவும் இக்காலக்கெடு எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kuruvai ,Minister ,Vinoth ,Chennai ,Welfare ,Prime ,Kar ,Sornavari… ,
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர்...