×

மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதா? செந்தில் பாலாஜி பதிலடி

சென்னை: மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்த மின்துறை அமைச்சருக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையானது 2011-16ல் ரூ.56,361 கோடி, 2016-21ல் ரூ.58,534 கோடி முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று கட்டங்களாக மின்சார கட்டணம் ஏற்றப்பட்டது. 37%, 3.5%, 16% என அந்த கட்டண உயர்வு இருந்தது. அப்படி மின் கட்டணம் ஏற்றப்பட்ட போது கூட வருவாய் பற்றாக்குறை என்பது ரூ.56,000 கோடி, அதற்கடுத்து ரூ. 58,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த எங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் வருவாயானது ரூ.1,48,77,856 உயர்ந்து ரூ.4,97,996 ஆக இருந்தது.

வருவாய் பற்றாக்குறை ரூ.34,447 கோடியாக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 58,000 வருவாய் அதிகரித்த போது செலவும் அதிகரித்துள்ளது பற்றி கூறும் மின்சாரத்துறை அமைச்சர் அந்த செலவுகள் எதற்காக செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டார். 2021 ல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது மின்சார வாரியத்தின் கடன் ரூ.1,59,731 கோடி இருந்தது. ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வட்டி மட்டுமே கட்டி வந்தோம். ஐந்தாண்டுகளில் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே ரூ.75,000 கோடி கட்டி உள்ளோம்.

இதை கூறாமல் மறைத்துள்ளனர். அதே போல அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள வழக்கில் ராஜஸ்தான் மின் மாற்றி கொள்முதலோடு தமிழ்நாட்டை ஒப்பிடுவதே தவறானது. நமது டெண்டர் முறை வேறு அவர்களுடையது வேறு, நாம் 25 ஆண்டுகள் நிலைத்திருக்க கூடிய தரமான மின் மாற்றிகளை வாங்குகிறோம். ஆனால் அவர்களுடைய மின்மாற்றி வாழ்நாள் 16 ஆண்டுகள் தான், அதே போல ஐந்தாண்டுகள் மெயிண்டனன்ஸ் அந்நிறுவனங்களின் பொறுப்பு அதற்காக நாம் 5% நிதியை பிடித்தம் செய்து வைத்துள்ளோம்.

ஆனால் ராஜஸ்தான் அரசு மூன்று வருடங்கள் மெயிண்டனன்ஸ், 0.5% நிதி மட்டுமே பிடித்தம் செய்கிறார்கள். சமீபத்தில் தவெக அரசு வெளியிட்ட 300 ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பது திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டது. அதேபோல சமீபத்தில் வழங்கிய பணி ஆணைகள் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படி திமுக அரசு செய்த செயல்களுக்கு தங்களின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் மின்வாரியத்துறை தொடர்பாக எங்கள் தலைவரது குடும்பத்தையோ, எதிர்க்கட்சி தலைவர் நண்பர்களையோ இணைத்து அவதூறு பரப்பினால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும். தங்களின் நிர்வாகத் திறமையின்மையை மூடி மறைக்க திமுக மீது ஆதாரமற்ற அவதூறுகளை கூறிக்கொண்டு இருக்காமல் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்த அரசு நவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செந்தில்பாலாஜி கூறினார்.

Tags : power ,DMK ,Senthil Balaji ,Chennai ,minister ,Former ,Anna Arivalayam ,
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர்...