- மாநில கலைக் கல்லூரி
- அன்புமணி
- சென்னை
- Bhamaka
- ஜனாதிபதி
- கலைக் கல்லூரிகள்
- அறிவியல்கள்
- கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 43% இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. 181 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மொத்தம் ஒரு லட்சத்து 26,959 இடங்கள் உள்ளன.
இதில் வெறும் 71,502 இடங்கள், அதாவது 56.32% இடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 43.68%, அதாவது 55,457 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரலாற்றில் இதுவரை இவ்வளவு இடங்கள் காலியாக இருந்தது இல்லை. மாணவர் சேர்க்கை அதலபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 முதல் ரூ.70,000 வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், அரசு கல்லூரிகளை புறக்கணித்து விட்டு, தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு முதன்மைக் காரணம் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் ஆண்டுக்கு ஆண்டு மோசமடைந்து வருவது தான். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அதன் மூலம் அரசு கலைக் கல்லூரிகளின் கல்வித் தரத்தையும், மாணவர் சேர்க்கையையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
