சென்னை: ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு 36 பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 39 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 25 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 42 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி கோட்டத்திற்கு 44 பேருந்துகள் என ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 300 புதிய பேருந்துகளின் சேவையை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், பேருந்தில் ஏறி சென்று நடத்துநரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொண்டு தலைமைச்செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை பயணம் மேற்கொண்டார். தற்போது தொடங்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகள் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து முனையங்களிலிருந்தும், மாநகர் போக்குவரத்து பேருந்துகள் தொடர்புடைய பேருந்து நிலையங்களிலிருந்தும் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்கி உள்ளன.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமை செயலாளர் சாய்குமார், போக்குவரத்துத்துறை செயலாளர் வள்ளலார், போக்குவரத்துத்துறை சிறப்புச்செயலாளர் லில்லி, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் மோகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
* போக்குவரத்து முடங்கியது
முதல்வர் விஜய்யின் பஸ் பயணத்தையொட்டி ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு, உழைப்பாளர் சிலை பகுதி, மெரினா கலங்கரை விளக்கம், டிஜிபி அலுவலகம், அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, லூப் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் காலை நேரத்தில் அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்காக புறப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். போக்குவரத்து முடங்கியது. ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
