டெல்டாவில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் 10 லட்சம் டன் நெல் மூட்டைகள் தேக்கம்: தவெக அரசின் அலட்சியத்தால் மழையில் வீணாகும் அவலம்

 

மன்னார்குடி: ெடல்டாவில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் 10 லட்சம் டன் நெல் மூட்டைகள் கடந்த 4 மாதமாக தேக்கமடைந்துள்ளன. தவெக அரசின் அலட்சியத்தால் இந்த நெல் மூட்டைகள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் 9, திருவாரூர் மாவட்டத்தில் 7, தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 4 என 28 இடங்களில் தமிழக அரசின் நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த கிடங்குகளில் காரிப் பருவம் 2025-26ல் கொள்முதல் செய்யப்பட்ட குறுவை, சம்பா நெல்மணிகள் மூட்டை மூட்டையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் 3.23 லட்சம் மெட்ரிக் டன், திருவாரூர் மாவட்டத்தில் 2.56 லட்சம் மெட்ரிக் டன், நாகை மாவட்டத்தில் 1.35 லட்சம் மெட்ரிக் டன், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் மெட்ரிக் டன், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 9.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதில் குறுவை மட்டும் 1.40 லட்சம் மெட்ரிக் டன். மொத்த கொள்முதலுக்கான செலவு ரூ.2,400 கோடி.
இதில் குறுவை 4 முதல் 5 மாதமாகவும், சம்பா 2 மாதமாகவும் தேங்கி கிடக்கின்றன. இந்த நெல் மணிகள் வெயிலிலும், காற்றிலும், மழையிலும் வீணாகி வருகின்றன.

எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகளை அரசு மற்றும் தனியார் ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி விவசாய சங்க தலைவர்கள் கூறியதாவது: கொள்முதல் செய்யப்பட்டதில் சம்பா நெல் மணிகள் ஓரளவு தாக்குப்பிடிக்கும். ஆனால் குறுவை இன்னும் 1 மாதமே தாக்குப்பிடிக்கும். அதற்குள் நகர்வு செய்யாவிட்டால், நெல் மணிகள் பாதிக்கப்படும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். அதேபோல் கோடை குறுவை 1 லட்சம் டன் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நெல்லும் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் கிடங்குகளில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இருக்காது. இதனால் நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். தமிழகத்தில் உள்ள பல நெல் சேமிப்பு கிடங்குகளில் திறந்த வெளியில் தான் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அடிக்கடி மழை பொழிந்து வருவதால் தார்ப்பாய் மூலம் மூடி நெல் மூட்டைகளை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் திறந்த வெளி கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்தது. இதனால் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தஞ்சை நடுவூரிலும் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கூட, நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருப்பது கவலை தருகிறது என நேற்று தெரிவித்தார்.

நெல் மூட்டைகளை நகர்வு செய்யும் விவகாரத்தில் தவெக அரசு ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என தெரியவில்லை. அதிகாரிகள் நெல் மூட்டைகளை நகர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முறைகேடு செய்ய அதிகாரிகள் திட்டம்?
4 மாதத்துக்கு மேல் நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பாமல் தேக்கி வைத்துள்ளனர். இதன்மூலம் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நகர்வு செய்யப்படாமல் தேக்கி வைத்திருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் எலி தின்று விட்டது, மழையால் வீணாகி விட்டது என்று சொல்லி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாம். குறிப்பாக 50,000 டன் நெல் வீணாகி விட்டால், 1 லட்சம் டன் நெல் வீணாகி விட்டதாக கணக்கு காட்டுவார்களாம்.

வீணாகாத நெல்லை தனியாருக்கு விற்று பணம் பார்த்து விடுவார்களாம். எனவே இந்த மாதிரி முறைகேட்டுக்கு வழிவகுக்காமல் நெல் மூட்டைகளை உடனே நகர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: